கார்கே தாக்கு
அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றவே மோடி 400 தொகுதிகள் இலக்கு: கார்கே தாக்கு
நாடாளுமன்றத்தில் முழு மெஜாரிட்டியுடன் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுவதற்காகவே பிரதமர் மோடி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இலக்கை நிர்ணயித்துள்ளார் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். கர்நாடக மாநிலம் சென்னபட்டாவில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பேசியதாவது: நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி பெற்று அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற பாஜ இலக்கு நிர்ணயித்துள்ளது. அதனால் தான் மோடி 400 இடங்களில் பாஜ வெற்றி பெறும் என்று கூறி வருகிறார். நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் கொள்கையின் அச்சு என்று மோடி குறிப்பிட்டுள்ளது குறித்து மோடியுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ தலைவர்கள் அரசியலமைப்பு சட்ட மாற்றம் குறித்து பேசுகிறார்கள். அவர்களை ஏன் மோடி தடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனென்றால் அரசியலமைப்பு சட்ட மாற்றத்தை கொண்டுவர அவரும் விரும்புகிறார். இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம் என்று காங்கிரஸ் அறிக்கையில் இருப்பது முஸ்லிம் லீக் கொள்கையா?, விவசாயிகளுக்கு ஆதாரவிலை, பெண்களுக்கு நீதி ஆகியன முஸ்லிம் லீக் கொள்கையா?. மோடி வாய்க்கு வந்ததை பேசுவார். மக்களின் சொத்தை கணக்கெடுப்பு நடத்தி அதே அளவு சொத்தை முஸ்லிம்களுக்கு கொடுக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசியுள்ளார். ஒரு பிரதமர் இப்படி பேசலாமா?. இந்து, முஸ்லிம்கள் இடையே வெறுப்புணர்வை மோடி தூண்டுகிறார். மோடிக்கு எதிரானது அல்ல காங்கிரஸ். ஆனால் அவரது கொள்கைக்கு எதிரானது. பாஜவில் மோடியே எல்லாமுமாக இருக்கிறார். அதனால் அவரை நாங்கள் விமர்சிக்கிறோம்’ என்றார்.