மூளையின் முடிச்சுகள்
உலகம் முழுவதும் 720 கோடி மக்களின் உடல் இருக்கிறது என்றால், 720 கோடி மக்களின் உடலுடன் சேர்ந்து மனங்களும் இணைந்து செயல்படுகிறது என்றே அர்த்தமாகும். ஆனால் உடல் நலத்திற்காக இயங்கும் மருத்துவத் துறையிலுள்ள பல வடிவங்களான ஆயுர்வேத மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி என்று வித விதமாக மருத்துவ சிகிச்சைகள் இருக்கிறது. அப்படியென்றால், மனநலம் பற்றி யாரும் பேசவில்லையா என்று கேட்டோமானால், இல்லை நிறைய பேசியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். மனநலம் பற்றி குறிப்பாக நம் தமிழ் சமூகத்தில் திருவள்ளுவர் மூன்று விதமான சொற்றொடரை கையாண்டிருக்கிறார். மனம், உள்ளம், நெஞ்சம் என்று மனநலம் பற்றி அந்தக் காலத்திலேயே வார்த்தைகளை எடுத்துக்கூறி நமக்கு தெளிவுபடுத்தியவராவார்.
இங்கு மனநலம் பற்றிப் பேசும் போது, மனநோயாளிகள் யார் என்றும், மனரீதியான பாதிப்பால் யார் இருக்கிறார்கள் என்றும் கேட்டால், பெரும்பாலும் தெளிவான பதில்கள் கிடைப்பதில்லை. மாறாக, மனதால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும், நடவடிக்கைகளையும் பார்த்து, சமூகத்தில் நிலவும் பொதுக் கருத்தை வைத்து ஒரு அலட்சிய மனப்பான்மையுடன், அம்மனிதர்களை திமிர் பிடித்தவர்கள் என்றும், வீம்பானவர்கள் என்றும், அவர்களின் செயல்களைக் கிண்டல் செய்தும், கேலி செய்தும், அதற்கான சிகிச்சையை யாரும் எடுக்க முன்வருவதில்லை என்பதே வருத்தமான விஷயமாக இருக்கிறது.
இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், அறிவாளிகள், தெளிவானவர்கள், வெற்றியாளர்கள் என யாரும் விதிவிலக்கல்ல.இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் மனநல சிகிச்சை சார்ந்த பலவித விழிப்புணர்வு மருத்துவத் துறையாலும், சமூக மக்களாலும் தொடர்ந்து பேசப்படுகிறது. ஆனால் யதார்த்தமோ முற்றிலும் வேறு. சமூக மக்களிடம் மனநோயாளிகள் பற்றிய பிம்பம் என்னவென்று கேட்டால், அவர்கள் வன்முறையாளர்கள் என்றும், அழுக்காக இருப்பார்கள் என்றுமே வெகுஜன மக்களின் மத்தியில் நம்பப்படுகிறது.
அந்த பிம்பங்களால் அவர்களை ஒதுக்கி வைப்பதும், அவர்களிடம் பேசுவதையோ, அவர்கள் நம் வீட்டு உறவினர் என்று கூறுவதையோ விரும்பாமல் இருக்கிறார்கள். உண்மையில் மனம் பாதிக்கப்படும் போது, அவர்களின் செயல்களும், நடவடிக்கைகளும் மற்ற மனிதர்களுக்கு, ஒரு அருவெறுப்பையும், ஒருவித ஒவ்வாமை உணர்வையும் ஏற்படுத்துகிறது. இதனாலேயே மனநலம் பற்றிய, மனநோயாளிகள் பற்றிய புரிதல்கள் மிகவும் குறைவாக இருக்கிறது. ஒரு மனநல ஆலோசகராக மனநல சிகிச்சை பற்றியும், மனநல நோயாளிகள் பற்றிய பிம்பத்தையும் இனி வரும் இதழ்களில் உடைத்து விளக்க இருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் மருத்துவர்களும், கலைஞர்களும், பொது மக்களும் மனநலம் சார்ந்தும், அதன் சிகிச்சைகள் சார்ந்தும் தொடர்ந்து பேசுகிறார்கள். அதனால் இன்று பலரும் மனரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுக்க உடன்படுகிறார்கள். உளவியல் பற்றி ஏன் தற்போது பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதென்றால், மனிதர்கள் என்றுமே சிந்தனைகளின் தொகுப்பாக இருப்பவர்கள். அந்த சிந்தனைகளின் வழியாக, அவர்களின் நினைவுகளும், அதனால் ஏற்படும் எண்ணங்களின் தீவிரமும் உணர்விலிருந்து உணர்ச்சிக் கொந்தளிப்பாக மாறிவிடும் நபராக இருப்பார்கள்.
ஏன் மனிதர்கள் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கிறார்கள் என்றால், அதற்கான அடிப்படைக் காரணமாக சொல்வதென்றால் காலநிலை மாற்றம் ஏற்படும் போது மனதளவில் மனிதர்கள் பல மாற்றங்களை ஆழ்மனதில் இருந்து மாறும் தன்மைக்கு இயற்கையாகவே ஆளாகிறார்கள். அடுத்ததாக ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியினால் வளரும் போதும், மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாகும் போதும், சமூகத்திலுள்ள பல வகையான விஷயங்களை அனுபவிக்கப் பழகுவார்கள். அது மனித மனதுக்குள் அடிப்படையாக, ஆழமாக பதிந்திருக்கும் தனி மனித ஒழுக்கம் சார்ந்த அடிப்படை நம்பிக்கைகளை உடைக்கும் உணர்வுக்குள் தங்களை மீறி தள்ளப்படுகிறார்கள்.
உதாரணமாக, மது, மாது, போதை மூன்றுமே தவறான பழக்கம் என்று ஆண்டாண்டு காலமாக நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைய நவீன உலகத்தில் இந்த மூன்றுமே சாதாரணமான செயல் என்று தற்போது மக்கள் நம்ப ஆரம்பித்தாலும், அதனால் ஏற்படும் தனிமனித மற்றும் சமூக விளைவுகளால், அதற்குள் சிக்கி இருக்கும் நபரின் குற்ற உணர்வுக்கும், அவமான உணர்வுக்கும் ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதனால் நம் குடும்பத்தின் கௌரவம், சமூகத்தின் முன் உள்ள பிம்பம், மேலே சொன்ன செயல்களால் பாதிக்கப்படும் போது மன உளைச்சலுக்கும், மனக்குழப்பத்திற்கும் ஆளாவார்கள்.
உளவியல் பற்றி பேச காரணம், மனிதர்கள் உணர்வுகளின் முன் என்றுமே, ஒரு வளர்ந்த குழந்தைப் போல் இருப்பார்கள். உணர்வுகளை கையாளத் தெரியாமல் இருக்கும் போது, மனிதர்கள் அழுவதும், வெடித்துக் கத்துவதும், சந்தோஷத்தை ஊரறிய சொல்வதுமாக இருக்கிறார்கள். உளவியல் என்றுமே மனித உணர்வுகளை பகடைக் காயாக வைத்து, மனிதனின் அறிவைப் பார்த்து கைக்கொட்டி சிரிக்கும் பாவையாக இருக்கிறது. அதனால்தான் அறிவும், உணர்வும் டாம் & ஜெர்ரி போல் ஒன்றை ஒன்று துரத்தி துரத்தி அடித்து விளையாடுகிறது.உணர்வா? அறிவா? யார் பெரியவர் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.