பாகிஸ்தான் செல்லும் ஈரான் அதிபர்
ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில், மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் செல்லும் ஈரான் அதிபர்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் செல்கிறார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு இடையே ஈரான் அதிபரின் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஈரான் அதிபருடன் அவரது மனைவி, வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பலரும் இந்த பயணத்தில் பங்கேற்கின்றனர். புதிய அரசு அமைந்த பிறகு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் தலைவர் ஈரான் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில் ஈரான் அதிபர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரிடம் இப்ராஹிம் ரைசி விரிவாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது பாகிஸ்தான் உடனான நல் உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் வர்த்தகம், எரிசக்தி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஈரான் அதிபர் விவாதிக்க உள்ளார்.