டிடிவி.தினகரன் காட்டம்

ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டுக்கு ரூ.10,000 கொடுத்தார் எடப்பாடி ஒரு அரக்கத்தனமான ஜென்மம்: டிடிவி.தினகரன் காட்டம்

எடப்பாடி பழனிசாமி அரக்கத்தனமான ஜென்மம். புனிதமான இடத்தில் அவரைப்பற்றி பேசுவது சரியல்ல என, கம்பத்தில் டிடிவி தினகரன் காட்டமாக கூறியுள்ளார். தேனி மாவட்டம், கம்பம் மதுபால்தாயம்மன் கோயில் விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலுக்கு பின் இரண்டு நாட்களாக இங்கு தான் இருக்கிறேன். செல்லும் இடங்களில் எல்லாம், பொதுமக்கள் நீங்கள் அமோக வெற்றி பெறுவீர்கள் என கூறுகின்றனர். நான் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டபோது ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. அப்போது எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை கொடுத்ததால் என்னைச் சார்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் அச்சமடைந்து சில வீடுகளில் ஏதோ டோக்கன் கொடுத்ததாக தகவல் கிடைத்தது.

உடனடியாக அதனை நிறுத்தினேன். ஆனால் நான் டோக்கன் கொடுத்தேன் என தவறான செய்தியை கிளப்பினர். தேர்தலுக்குப் பின்பு, அதிமுக எங்கள் வசம் வந்து விடும் என அண்ணாமலை கூறியுள்ளார். தேவையின்றி பேசும் பழக்கம் இல்லாத அவர், எதை வைத்து இப்படி கூறியுள்ளார் என்பதை தேர்தல் முடிந்த பிறகு பார்க்கலாம். எம்ஜிஆர், ஜெயலலிதா மீது பாஜவுக்கு பெரிய மரியாதை, அன்பு உள்ளது. எம்ஜிஆர் துவக்கிய கட்சி, நல்லவர்கள் கையில் வர வேண்டும் என அவர் பேசியுள்ளார். இவ்வாறு கூறினார். பின்னர் செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமி குறித்து கேட்டபோது, ‘‘கோவிலில் அமர்ந்து நல்ல விஷயம் பேசுகிறோம். சில மனிதர்கள் எதிர்மறையானவர்கள். மனிதர்கள் அல்லாது அரக்கத்தனமான ஜென்மங்களை பற்றி இங்கு பேசுவது சரியல்ல’’ எனக்கூறினார்

Leave a Reply

Your email address will not be published.