அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த குகேஷுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த குகேஷுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘பிடே’ கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 13வது சுற்றுகளின் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தார்.
நெபோம்நியாச்சி, நகமுரா, காருனா தலா 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று கடைசி சுற்றான 14வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ் அமெரிக்காவின் நகருராவை கருப்புநிற காய்களுடன் சந்தித்தார். இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டியதுதான் என்ற இக்கட்டான சூழ்நிலையில் களம் இறங்கிய குகேஷ் இந்த ஆட்டத்தை டிரா செய்தார். இதன் மூலம் அவர் 9 புள்ளிகளை பெற்றார்.
மறுபுறம் நெபோம்நியாச்சி – பேபியானோ காருனா இடையிலான ஆட்டமும் டிரா ஆனதால் குகேஷ் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டார். இதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் (17 வயது) வென்ற வீரர் என்ற பெருமையை பெற்ற குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை எதிர்கொள்ள உள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, SDAT இன் ELITE விளையாட்டு வீரர் மற்றும் கிராண்ட்மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்FIDE Candidates செஸ் போட்டி 2024 இன் சாம்பியனான குகேஷ் டி.17 வயதான சென்னையின் பெருமை இந்திய செஸ்ஸில் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு, கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற இரண்டாவது இந்திய வீரர் குகேஷ் ஆவார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக டிங் லிரனுக்கு சவால் விடும் வகையில் அவர் தயாராகும் போது அவருக்கு நல்வாழ்த்துக்கள். குகேஷுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.