விரல் மை காட்டி கொடுத்தது
ஒரே நபருக்கு 2 இடத்தில் வாக்குரிமை; கோவையில் 2-வது ஓட்டு போட முயன்றவர் கைது:
கோவையில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று மும்முரமாக நடந்தது. கவுண்டம்பாளையம் நல்லாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று ஏராளமனோர் வாக்களிக்க வரிசையில் நின்றனர்.அப்போது ஒருவர் வாக்குச்சாவடிக்குள் சென்றார். அவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வாக்குச்சாவடி அலுவலர் லதா மகேஸ்வரி, அவரது விரலை சோதித்தனர்.
அதில் வாக்களித்ததற்கான மை இருந்தது.இதுகுறித்து அவர் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர், இதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (52) என்பது தெரியவந்தது. இவருக்கு காந்திபுரம் மற்றும் நல்லாம்பாளையம் என 2 வாக்குச்சாவடிகளிலும் வாக்கு இருந்தது.முதலில் காந்திபுரத்தில் வாக்களித்தார். அதன்பின்னர் நல்லாம்பாளையத்தில் மீண்டும் வாக்களிக்க முயன்றபோது சிக்கியுள்ளார். திருநாவுக்கரசை போலீசார் கைது செய்தனர்.