தமிழ்நாட்டிலே அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: இந்திய வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டிலே அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலே கடந்த மார்ச் முதல் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கத்திரி வெயில் காலமான மே மாதத்திற்கு முன்னதாகவே வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை காற்றின் ஈரப்பதம் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சமவெளிப்பகுதிகளில் பிற்பகலில் 30% முதல் 50%ஆகவும் மற்ற நேரங்களில் 40% முதல் 70%ஆகவும், கடலோர பகுதிகளில் 50% முதல் 80%ஆகவும் இருக்க கூடும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிக வெப்ப நிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் இடங்களில் உள்ள மக்களுக்கு உடல் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 – 5 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை இருக்கக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலையாக தமிழக உள் மாவட்டங்களில் சமவெளிப்பகுதிகளில் அநேக இடங்களில் 38 – 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.