தருமபுரியில் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரம்!
பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிய இருக்கும் நிலையில், மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி.
மக்களிடையே அவர் பேசுகையில்,
“தருமபுரி மாவட்ட வறட்சியைப் போக்க காவிரி – தருமபுரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துவேன் என்றும் அதன்மூலம் 3 டி.எம்.சி உபரி நீரை, நீரேற்று முறையில் தருமபுரி மாவட்டத்தில் 1230 நீர்நிலைகளில் நிரப்ப முடியும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தருமபுரி மாவட்டத்தின் 9 ஒன்றியங்கள் பயனடையும், சுமார் 15 லட்சம் பேருக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கும், கூடுதலாக 1 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும்.
பா.ம.க.வின் முயற்சியால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.7840 கோடியில் செயல்படுத்தப்படுவதற்கு முழுமூச்சாக செயல்படுவேன்.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மக்களவை உறுப்பினராக இருந்து போது உருவாக்கிய 14 நீர்ப்பாசனத் திட்டங்களில் பாளையம்புதூர் & ஜெகநாதன் கோம்பைத் திட்டம், மாரியம்மன் கோவில் &பள்ளம் அணைத் திட்டம் ஆகியவை முடிக்கப்பட்டு விட்டன. பணிகள் தொடங்கப்பட்ட பஞ்சப்பள்ளி – ஜெர்தலாவ் பாசனக் கால்வாய், தூள்செட்டி ஏரி இணைப்பு, எண்ணேகொல்புதூர் – தும்பல அள்ளி நீர்ப்பாசன திட்டம் ஆகியவற்றை விரைந்து முடிப்பேன்.
இதுவரை நிதி ஒதுக்கப்படாத சின்னாறு -தொள்ளக்காது அணைத்திட்டம், பஞ்சப்பள்ளி – பாப்பாரப்பட்டி – இண்டூர் பாசன கால்வாய் திட்டம், குமாரசெட்டி – உப்பம்பள்ளம் தடுப்பணை திட்டம், நாகமரை ஊராட்சி மத்தளப்பள்ளம் கால்வாய், பொதியம் பள்ளம் அணை, வாணியாறு நீர்தேக்க இடதுபுற கால்வாய் நீட்டிப்புத் திட்டம், ஆணைமடுவு தடுப்பணைத் திட்டம், வள்ளி மதுரை அணை மட்டத்தை உயர்த்துதல் திட்டம் உள்ளிட்ட 9 திட்டங்களுக்கும் அரசின் நிதியைப் பெற்று செயல்படுத்த பாடுபடுவேன்.
பா.ம.க. இந்நாள், முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தருமபுரி சிப்காட் வளாகத்திற்கு இந்தியாவின் பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வருவேன். அங்கே பல ஆயிரம் வேலைவாய்ப்புகளை உள்ளூர் இளைஞர்களுக்கு ஏற்படுத்துவேன். அதன் மூலம் தருமபுரி மாவட்டம் பொருளாதார மறுமலர்ச்சி பெறும். மேலும் பெண்களின் வேலைவாய்ப்புக்காக ஆயத்த ஆடை பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
இத்தொகுதி மக்களின் 80 ஆண்டு கனவான தருமபுரி – மொரப்பூர் இரயில் பாதை திட்டத்திற்கு, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் முயற்சியால், ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, தாமதமாகி வரும் இத்திட்டப் பணிகளை உடனடியாக முடித்து ரயில் பயணத்தை தொடங்க விரைவாக நடவடிக்கை மேற்கொள்வேன்.
தருமபுரியில் விளையும் மா, புளி, தக்காளி, மரவள்ளி, கரும்பு ஆகியவற்றை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி செய்யவும் வசதியாக, தருமபுரியில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தவும் சிறப்பு மண்டலம் அமைக்கப்படும், பட்டுப்புழு வளர்ப்பு மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்
பல நூறு உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும் தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகளைத் தடுப்பதற்கான ரூ.775 கோடி செலவிலான உயர்மட்ட சாலைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுப்பேன்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக தனிப்பிரிவு, காயச் சிகிச்சைக்காக தனி வளாகம், சிறுநீரகவியல் சிகிச்சைக்காக தனிப்பிரிவு, இருதய சிகிச்சைப் பிரிவு, மூளை & நரம்பியல் சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றை ஏற்படுத்த பாடுபடுவேன். மேலும் பெண்ணாகரம், அரூர் மருத்துவமனைகளை மேம்படுத்துவேன்.
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை சிறந்த சுற்றுலா மையமாக மாற்றி தொகுதியின் பொருளாதரா வளர்ச்சிக்கு உதவுவேன்” என தன்னுடைய திட்டங்களை எடுத்துக்கூறி மாம்பழம் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார் சௌமியா அன்புமணி.