டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
தேர்தல் முடியும் வரை சிறை தான் போல…டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்த நிலையில் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் ஒரு முறையீட்டை முன்வைத்தார்.
அதில்,‘‘டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதற்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் காலம் என்பதால் மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மேற்கண்ட வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அபிஷேக் மனு சிங்வி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கட்சியின் தலைவராக இருப்பதால் கைது காரணமாக பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத சூழல் உள்ளது. எனவே இந்த வழக்கை ஏப்ரல் 19ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். விசாரணையை 19ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், கெஜ்ரிவாலின் மனுவிவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது.