கொத்தமல்லி பொடி தோசை செய்முறை

தேவையான பொருட்கள் கொத்தமல்லி – 1 கட்டு, உளுத்தம் பருப்பு – 1/2 கப், கொள்ளு பருப்பு -1/4 கப், காய்ந்த மிளகாய் – 8, உப்பு – கால் டீஸ்பூன் பெருங்காயம்  1 சிட்டிகை, புளி – நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – பொரித்து எடுக்க தேவையான அளவு.

செய்முறை முதலில் கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி விடுங்கள். இந்த கொத்தமல்லி ஒரு டிஷ்யூ பேப்பரிலோ அல்லது மெலிதான காட்டன் துணியில் போட்டு கொஞ்சம் கூட ஈரம் இல்லாத அளவுக்கு துடைத்து விடுங்கள். இதை நீங்கள் முதல் நாள் இரவே கூட செய்து வைத்து விடலாம். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் சுத்தம் செய்து வைத்த கொத்தமல்லியை போட்டு லேசாக பொரிய விட்டு எடுத்து விடுங்கள். அடுத்து வேறொரு கடாய் வைத்து சூடானதும் உளுத்தம் பருப்பை சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்து தனியாக வைத்து விடுங்கள். அதே போல் கொள்ளு பருப்பையும் தனியாக வறுத்து வைத்து விடுங்கள்.

இப்போது அதே கடாயில் காய்ந்த மிளகாய் புளி அனைத்தையும் சேர்த்து ஒரு முறை லேசாக பிரட்டி அடுப்பை அணைத்து விடுங்கள். அடுத்ததாக மிக்ஸி ஜாரில் உளுத்தம் பருப்பு கொள்ளு பருப்பு காய்ந்த மிளகாய் புளி உப்பு பெருங்காயம் அனைத்தையும் சேர்த்து பவுடராக அரைத்து விடுங்கள். இதை அரைக்கும் போது எந்த காரணத்தை கொண்டும் தண்ணி ஊற்றி விடாதீர்கள். இந்த பருப்பு வகைகளை நைசாக அரைக்க வேண்டும். இவையெல்லாம் அரைத்த பிறகு கடைசியாக கொத்தமல்லி சேர்த்து ஒரு முறை அரைத்து விட்டால் அட்டகாசமான கொத்தமல்லி பொடி தயார். இந்த ஒரு பொடி இருந்தால் போதும் வேறு சைடு டிஷ்யே தேவை இல்லை. தோசை ஊற்றும் போது அதன் மேலே இந்த பொடியை தூவி கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி சுட்டு சாப்பிடுங்கள் அட்டகாசமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.