பிரசவ காலத்தில் தினமும் இறப்பை தழுவும்
இந்தியாவில் உயிரிழப்பு 34 சதவீதம் குறைந்தது பிரசவ காலத்தில் தினமும் இறப்பை தழுவும் 800 பேர்:
இந்தியாவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 11ம் தேதி (இன்று) தேசிய அளவில் பாதுகாப்பான தாய்மை தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைக்கு தாய்வழியாக கிடைக்கும் ஆரோக்கியம், தாய்க்கு பிரசவத்திற்கு பிறகான மருத்துவ கவனிப்புகள் என்பது மிகவும் அவசியம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய அளவில் பாதுகாப்பான தாய்மை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை மகப்பேறு காலத்தில் பெண்களின் இறப்பு என்பது தொடரும் பிரச்னையாக உள்ளது. இறப்பை தவிர்க்க கூடிய பாதிப்புகளாக இருந்தும், அதில் போதிய விழிப்புணர்வு இல்லாததே இந்த விபரீதத்திற்கு காரணம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. மகப்பேறு தொடர்புடைய தடுக்கவல்ல காரணங்களாக இருந்தும் தினசரி சராசரியாக 800 பேர் இறப்பை தழுவியுள்ளனர். ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு தாயை இந்த உலகம் இழந்திருக்கிறது. அதேநேரத்தில் ெதாடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் சிறிய பலனும் கிடைத்துள்ளது. 2000ம் ஆண்டில் இருந்து 2020ம் ஆண்டிற்கு இடைப்பட்ட 20 ஆண்டுகளில் மகப்பேறு கால இறப்புகள் 34 சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும் அபாயங்கள் தொடர்ந்து வருகிறது என்று ஆய்வுகள் கோடிட்டு காட்டியுள்ளது. மகப்பேறு கால உயிரிழப்புகளில் 95சதவீதம் உயிரிழப்புகள் ஏழை நாடுகளில் தான் நடக்கிறது. இந்தியாவில் 2020ம் ஆண்டில் மட்டும் 23,800 மகப்பேறு கால மரணங்கள் நடந்துள்ளது. இதில் அதிகளவு உயிரிழப்புகள் அசாம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் நடந்துள்ளது என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.
இது குறித்து மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: இந்தியாவை பொறுத்தவரை மகப்பேறு கால இறப்புக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. இதில் மிகவும் முக்கியமானது ரத்தப்போக்கு. பிரசவத்தின் போதோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ தாய்க்கு ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கால் நிகழும் இறப்புகள் அதிகரித்து வருகிறது. நஞ்சுக்கொடி பிரீவியா, நஞ்சுக்கொடி சீர்குலைவு போன்ற காரணங்களால் இது நிகழ்கிறது. இதேபோல் ஒரு குழந்தையை சுமக்கும் போது பெண்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய காலத்தில் நோய் தொற்றுகள் பரவி, தாயின் இறப்புக்கு வழிவகுக்கிறது. மேலும் ஒரு பெண் ஏற்கனவே ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு நோய், ரத்தஅழுத்த கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் பிரசவத்தில் அதிக ஆபத்து உள்ளது. கர்ப்பத்தின் ஆபத்து என்பது வயதுக்கு ஏற்பவும் அதிகரிக்கும்.
இவை அனைத்தும் ஒரு புறமிருக்க கலாச்சார நடைமுறைகள், பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் சமூகவிதிமுறைகள் தாய்வழி பராமரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குடும்பத்தின் அழுத்தமும், பொருளாதார சூழல்களும் பெண்களுக்கான ஆரோக்கியத்தையும், சிறந்த சிகிச்சையையும் தடுக்கிறது. அதேபோல் ஏழ்மை, கல்வி அறிவின்மை, போதிய விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களும் சுகாதார பாதுகாப்புக்கான அணுகலை தடுத்து விடும் முக்கிய காரணங்களாக உள்ளது. தற்போது ஏராளமான அரசு மருத்துவமனைகளில் மகப்பேற்றுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் இயங்கி வருகிறது. ஒன்றிய, மாநிலஅரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இவற்றின் மூலம் உயர்தரத்திலான நவீன சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதை கர்ப்பிணி தாய்மார்களும், குடும்பத்தினரும் முறையாக பயன்படுத்த வேண்டும். இதன்மூலமும் தொடரும் மகப்பேறு கால இறப்புகளை கணிசமாக நாம் குறைக்க முடியும்.இவ்வாறு மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.