PBKS அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற SRH
சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ராபாடா வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே, ஹைதராபாத் வீரர் ஹெட் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். எனினும், பஞ்சாப் அணி ரிவியூ கேட்காத நிலையில், ஹெட் தப்பித்தார். எனினும் ஷிகர் தவனின் அற்புதமான கேட்சால் 21 ரன்களில் வெளியேறினார்.
39 ரன்களில் 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஹைதராபாத் அணி இம்பேக்ட் வீரராக திரிபாதியை அனுப்பியது. அவரும் சோபிக்கவில்லை. அதேநேரத்தில் இளம் வீரர்கள் நிதிஷ் ரெட்டி, அப்துல் சமது ஆகியோரின் அதிரடியால் ஹைதராபாத் அணி ரன்களை குவித்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் விளையாடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. எனினும், சஷாங் சிங், அசுதோஷ் சர்மா ஆகியோர் அதிரடி காட்ட பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 3 சிக்சர்கள் பறந்தன. எனினும் ஹைதராபாத் அணி 2 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது.