இந்திய ரசிகர்கள் மிகவும்
இந்திய ரசிகர்கள் மிகவும்.. ஹர்திக் பாண்டியா குறித்து ஓபனாக பேசிய பேட் கம்மின்ஸ்
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை எடுத்த பின்னர் ஹர்திக் பாண்டியாவை மும்பை ரசிகர்களே வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் டாஸ்-க்கு வரும்போது, பேட்டிங் செய்ய வரும்போது, பீல்டிங்கில் இருக்கும்போது என எப்போது அவர் களத்தில் இருந்தாலும் ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷமிடுவதும், அவர் உள்ளே வரும்போது ரோகித் பெயரை கத்துவது என அவருக்கு தொடர்ந்து தர்மசங்கடத்தையே கொடுத்து வருகின்றனர்.
மேலும் தற்போது வரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் டக்-க்கு பேட்டி கொடுத்த சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், ஹர்திக் பாண்டியா குறித்து தெரிவித்துள்ளார்.
அவர் பேசியபோது, “உண்மையில் இதுகுறித்து நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. நான் அவரின் இடத்தில் இல்லை. இந்திய ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். இது அவருக்கு ஒரு கஷ்டமான காலகட்டம், அவ்வளவுதான். நிச்சயம் இந்த சூழல் அவருக்கு மாறும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் நடந்த ராஜஸ்தான் – பெங்களூரு போட்டியில் விராட் கோலி 67 பந்துகளில் சதம் விளாசினார். ஆனால் இந்த ஸ்கோரை அவர் மிகவும் நிதானமாக எடுத்தார் எனவும், ஐபிஎல் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்டு எடுக்கப்பட்ட சதம் என கோலி மீது விமர்சனங்கள் எழுந்தது.
இது குறித்து பேட் கம்மின்ஸ்-யிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, “இது குறித்தும் எனக்கு கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை” என தெரிவித்தார். மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில், ஜைதராபாத் அணி 277 ரன்களை எடுத்து, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.