விவசாயிகள் சாலை மறியல்… கர்ப்பிணி வந்த காருக்கு வழிவிட்ட மனிதநேயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உத்திரகோசமங்கை விலக்கு சாலையில் குண்டு மிளகாய்க்கு உரிய விலை கேட்டு விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனைக்கு செல்வதற்காக காரில் வந்த கர்ப்பிணிக்கு விவசாயிகள் மனிதநேயத்துடன் வழிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி – ராமநாதபுரம் உத்திரகோசமங்கை விளக்கு சாலையில் தாங்கள் விளைவித்த குண்டு மிளகாய்க்கு உரிய விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தினால் மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றது.
அப்போது, அவ்வழியாக அவசரமாக மருத்துவமனைக்கு வந்த கார் ஒன்றில் நிறைமாத கர்ப்பிணி வயிற்று வலியால் துடித்து கொண்டிருந்தார். இதனை கண்ட விவசாயிகள் உடனடியாக போராட்டத்தினை நிறுத்தி தங்களது வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்து கர்ப்பிணி வந்த வாகனத்திற்கு வழிவிட்டு மனிதாபிமானம் காத்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.