பீகாரில் லாலு மகளுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு – இம்முறையேனும் வெற்றிப் பெறுவாரா
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பீகார் மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த பல மாதங்களாக இழுபறியில் இருந்த கூட்டணி கட்சிகளின் இடபங்கீடு முடிவுக்கு வந்த நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் அதன் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இடம்பெற்றுள்ள மகா கூட்டணி உள்ளது. வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு மகா கூட்டணி பீகாரில் போட்டியிடுகிறது. எந்த கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்ற இழுபறி நீடித்து வந்த நிலையில், மொத்தம் உள்ள இடங்களில் 26 இடங்கள் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கும் 9 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கும் மீதமுள்ள 5 இடங்கள் இடதுசாரி கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு ஒதுக்கப்பட்ட 26 இடங்களில் 22 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கட்சியின் தலைவரான லாலுவின் மகள்களான மிஷா பாரதி, ரோஹினி ஆச்சாரியா ஆகியோருக்கு பாடலிபுத்திரா, சரண் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதில் மிஷா ஏற்கனவே 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் பாடலிபுத்திரா தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறையும் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.