நெல்லையில் கடும் வெயிலின் போது அவ்வப்போது மேகமூட்டமாக நிலவும் வானிலை

தமிழகத்தில் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இறுதித்தேர்வு நடத்தப்பட்டு கோடையில் விடுமுறை அளிக்கப்படும்.

கோடைக்காலம் என்பது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான காலமாக இருக்கலாம். ஆனால் பொதுமக்களைக் கோடைக்காலம் துவங்குவதற்கு முன்னரே வெயில் வாட்டி வதைத்து அவதிக்குள்ளாக்கி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடையின் கொடூரம் துவங்கி விட்டது. ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் 102 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கப் பொதுமக்கள் இளநீர், மோர் போன்ற பானங்களை அருந்தி வருகின்றனர்.

திருநெல்வேலி நகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லேசாகத் தூரல் விழுந்தது. இதனால் கோடைமழை பெய்யும் என பொதுமக்கள் நினைத்தனர். ஆனால் மழை பெய்யாமல் பொய்த்துவிட்டது.

ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், லேசாகத்தூறல் விழுந்ததால் கூடுதலாக வெப்பம் அதிகரித்தது. மேலும், அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை பெய்து மண்ணை குளிர்வித்து தங்களை வெப்பத்தில் இருந்து காக்கும் என மக்கள் நினைக்கின்றனர்.

ஆனால் அதற்குள் மேகம் கலைந்து மக்களின் மழை வேண்டிய ஆசையும் கலைந்து விடுகிறது. வானிலை அப்படி இப்படி போக்கு காட்டி வரும் நிலையில், கோடை மழை எப்போது பெய்யும் எனத் திருநெல்வேலி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.