திமுவினர் மீது பகீர் குற்றச்சாட்டு

ஜெயலலிதாவை ‘அம்மா’ என குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பிரதமர் மோடி வேலூரில் பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

வேலூர் கோட்டை மைதானம் அருகே நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  வேலூர், ஆரணி, தருமபுரி, அரக்கோணம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி தொகுதிகளில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது திமுக மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழ்நாட்டு மீனவர்கள் ஐந்து பேரை இலங்கையில் தூக்கு தண்டனையில் இருந்து மத்திய அரசு காப்பாற்றி மீட்டு வந்ததாகக் கூறிய பிரதமர், திமுகவும் காங்கிரசும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததாகக் குற்றஞ்சாட்டினார்.

அதேபோல, பெண்களை திமுக அரசு அவமதிப்பதாகக் குற்றஞ்சாட்டிய பிரதமர் மோடி, பெண்களை இழிவுபடுத்துவதில் திமுகவும் இந்தியா கூட்டணியும் இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை திமுகவினர் எப்படியெல்லாம் அவமானப்படுத்தினார்கள் எனும் விஷயம் பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டடினார். அப்போது ஜெயலலிதாவை ‘அம்மா ஜெயலலிதா’ என குறிப்பிட்டு மோடி பேசினார்.

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா, கடந்த காலங்களில், மோடியா அல்லது இந்த லேடியா என கேட்டு பிரதமர் மோடிக்கு எதிராக காட்டமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். ஜெயலலிதாவின் அந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் இன்றளவும் பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதாக கூறி திமுகவை பிரதமர் குற்றஞ்சாட்டுவதும் ஜெயலலிதாவை ‘அம்மா ஜெயலலிதா’ என குறிப்பிட்டு பிரதமர் பேசுவதும் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.