கார் கவிழ்ந்து கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
மதுரை அருகே கார் கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஐவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல் மனைவி கிருஷ்ணகுமாரி, மகன் மணி, உறவினர் நாகஜோதி , 5 வயது சிறுமி சிவா ஆத்மிகாவுடன் தளவாய்புரம் மாரியம்மன் கோயில் தீமிதி விழாவுக்கு காரில் சென்றார். திருவிழாவை முடித்துவிட்டு அவர்கள் காரில் இன்று அதிகாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
காரை கனகவேலின் மகன் மணி இயக்கினார்.விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சிவரக்கோட்டை பேருந்து நிலையம் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, கொய்யாப்பழ வியாபாரி பாண்டி, இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முற்பட்டார்.
அப்போது அதிவேகமாக வந்த கார், பாண்டியின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியதில் பாண்டி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி, தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ஐந்து பேரில் 4 பேர் உயிரிழந்தனர்.
காரை இயக்கிய மணி மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்