காய்கறி கொழுக்கட்டை ரெசிபி… மாலையில் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க
கொழுக்கட்டையானது தென்னிந்தியாவில் செய்யப்படும் ஒரு பிரபலமான சிற்றுண்டியாகும். இதை இனிப்பு அல்லது கார கொழுக்கட்டையாக செய்வார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியானது ஆரோக்கியம் நிறைந்த சுவையான காய்கறி கொழுக்கட்டை எப்படி செய்வது என்று தான்.
இந்த காய்கறி கொழுக்கட்டையை தேங்காய் சட்னி அல்லது காரா சட்னியுடன் சேர்த்து சூடாக பரிமாறினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
அரைப்பதற்கு தேவையானவை :
- பழுப்பு அரிசி – 1 கப்
- தண்ணீர் – 1 கப்
மற்ற பொருட்கள் :
- கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய கேரட் – 1 கப்
- நறுக்கிய முட்டைக்கோஸ் – 1 கப்
- நறுக்கிய பீன்ஸ் – 1 கப்
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி துண்டு – 1 அங்குலம்
- கடுகு – ¼ டீஸ்பூன்
- சீரகம் – ¼ டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் பழுப்பு அரிசியை இரண்டு மூன்று முறை நன்றாக அலசி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
அரிசி நன்றாக உறியவுடன் தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் அரிசியை போட்டு அதனுடன் 1 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து கொள்ளுங்கள்.
தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்துக்கொள்ளவும்.
கடுகு வெடித்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து காய்கறிகள் பாதியளவு வேகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவை ஊற்றி கிளறவும். அரிசி கலவையானது உடனடியாக ஒரு மாவு பதத்திற்கு கெட்டியாகிவிடும்.
எனவே இவை கொழுக்கட்டை செய்யவேண்டிய பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
கொழுக்கட்டை மாவு சூடாக இருக்கும் போதே உங்கள் கைகளை குளிர்ந்த நீரில் நனைத்து தேவையான அளவு மாவை எடுத்து கொழுக்கட்டையாக பிடித்துக்கொள்ளுங்கள்.
பின்னர் இவற்றை ஒரு இட்லி தட்டில் வைத்து மிதமான தீயில் 15 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
இவை வெந்ததும் இட்லி தட்டிலிருந்து எடுத்து சூடாக அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்.