ஐ.டி வேலையை துறந்து விவசாயத்தில் லட்சத்தில் லாபம் ஈட்டும் பட்டதாரி
கணவன்-மனைவி இருவருக்கும் ஐ.டி துறையில் வேலை. கை நிறைய சம்பளம். ஆனால் இவை எதுவுமே வேண்டாம் என்று தன் சொந்த ஊரில் விவசாயம் செய்ய குடும்பத்துடன் கிளம்பிவிட்டார் பிருந்தா. அவர் மட்டுமில்லாமல் கணவர், மாமனார், மாமியார் என அனைவரும் விவசாயத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள். ‘‘விவசாயம் நொடிந்துவிட்டது என்று கூறுவது தவறானது. கோவிட் காலத்தில் எங்க குடும்பத்திற்கு கைகொடுத்தது விவசாயம்தான். இன்று இதில் நாங்க லட்சத்தில் லாபம் பார்த்து வருகிறோம்’’ என்றார் பிருந்தா. விவசாயத்தில் ஈடுபடக் காரணம்… அதில் அவர் செய்யும் விவசாய முறைகள் பற்றி விளக்குகிறார் பிருந்தா.
‘நான் முதுகலைப் பட்டதாரி. நாங்க இருவருமே ஐ.டி துறையில்தான் வேலை பார்த்து வந்தோம். நாங்க தலைமுறை தலைமுறையாக சென்னையில்தான் வசித்து வந்தோம். எங்களின் குடும்பத் தொழில் தையல் கலை. என் மாமனார், அவரின் மூதாதையர்கள் எல்லோரும் இந்தத் தொழிலில்தான் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அதில் அவர்களால் பெரிய அளவில் முன்னேற்றம் பார்க்க முடியவில்லை. நாம் தைக்கும் துணிக்கு ஏற்பதான் வருமானமும் இருந்தது.
இதில் உள்ள சிக்கல்கள் தெரிந்ததால் என் கணவர் அந்தத் தொழிலில் ஈடுபடாமல், ஐ.டி துறையை தேர்வு செய்தார். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் கொரோனா சூறாவளியால் எங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. நாங்க பார்த்து வந்த வேலை எங்களின் கைவிட்டுப் போனது. என்ன செய்வதுன்னு தெரியல. சென்னை போன்ற நகரத்தில் நிரந்தர சம்பாத்தியம் இல்லாமல் வாழ்வது என்பது அசாத்தியமான விஷயம்.
அதனால் கையில் இருக்கும் காசைக் கொண்டு கிராமத்தில் ஏதாவது ஒரு விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளலாம்னு முடிவு செய்தோம். இயற்கையோடு ஒத்து வாழலாம்னு நாங்க அனைவரும் குடும்பமாக திட்டமிட்டோம். எங்கு வாங்கலாம் என்று யோசித்த போது தேனிதான் நினைவிற்கு வந்தது. அங்கு விவசாய நிலம் வாங்குவது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் வத்தலக்குண்டு பகுதியில் இரண்டரை ஏக்கரில் தென்னை தோப்பு விலைக்கு இருப்பதாக தெரிய வந்தது. மேலும் அது பராமரிப்பு இன்றி இருப்பதால் அந்த நிலத்தையே எங்களின் விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தோம்’’ என்றவர் அதன் பிறகு குடும்பத்துடன் வத்தலக்குண்டுவில் செட்டிலாகிவிட்டார்.
‘‘2019ல்தான் கோவிட் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்க ஆரம்பித்தது. விவசாயம் என்று முடிவு செய்யும் போது நிலமும் கிடைத்ததால், அதை வாங்கினோம். அந்த நிலம் பராமரிப்பு இன்றி இருந்ததால், அதை நாங்க சீராக்க எங்களுக்கு கிட்டத்தட்டஒரு வருட காலமானது. நிலம் அனைத் தும் சீரானதும், நாங்க அனைவரும் சென்னையை விட்டு முழுமையாக குடும்பத்தோடு வத்தலக்குண்டுவிற்கு இடம் பெயர்ந்தோம்.
எங்களின் விவசாய நிலத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்கி விவசாயத்தினை குடும்பத்தோடு செய்து வந்தோம். கிட்டத்தட்ட இரண்டரை ஏக்கர் நிலம் அது. ஆனால் எங்களால் தினமும் வீட்டிற்கு சென்று நிலத்தினை வந்து பார்த்துக் கொள்வது என்று முடியாமல் போனது. அதனால் நிலத்திலேயே ஒரு பகுதியில் வீடு கட்ட முடிவு செய்தோம். தற்போது எங்களின் நிலத்திலேயே வீடு கட்டி, விவசாயத்தையும் பார்த்துக் கொள்கிறோம்’’ என்ற பிருந்தா, தான் செய்யும் விவசாய முறைகள் பற்றி கூறினார்.