மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு… ஏப்ரல் 20 முதல் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராக பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூருக்கு உத்தரவு
மும்பை: ஏப்ரல் 20 முதல் வாக்கு மூலம் பதிவு செய்வதற்காக தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2008 செப்டம்பர் 29ல் மகாராஷ்டிராவின் மாலேகான், நாசிக்கில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியாரும், பாஜக எம்.பியுமான பிரக்யா சிங் தாகூர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், உடல்நிலை காரணமாக இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர், அடிக்கடி கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடுவதும், நடனமாடும் வீடியோக்கள் வெளியாகியது. மேலும் வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும், பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூருக்கு மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என பிரக்யா தாகூர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க, போபால் என்.ஐ.ஏ அதிகாரிகள் பிரக்யா தாகூரின் உடல்நலன் குறித்து விசாரித்து அறிக்கையாக ஏப்ரல் 9-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, என்ஐஏ அதிகாரி அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், மருத்துவர் பிரக்யா தாக்கூரின் வீட்டிற்குச் சென்று, ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 20 முதல் வாக்கு மூலம் பதிவு செய்வதற்காக தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் பாஜக வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் பிரக்யா சிங்கின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.