வயல்களில் மாட்டுகிடைபோட்டு இயற்கை

அறுவடை பணிகள் முடிந்ததால் வயல்களில் மாட்டுகிடைபோட்டு இயற்கை உரம் சேகரிப்பு

விவசாயிகள் மத்தியில் இயற்கை உரத்துக்கு மவுசு அதிகரித்து வரும் நிலையில் தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள வயல்களில் மாட்டு கிடை போட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்துக்கு கால்நடைகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த சமீபகாலமாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது தஞ்சாவூர் பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அறுவடை பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனால் அறுவடை முடிந்த வயல்களில் இயற்கை உரத்திற்காக கால்நடைகளின் கழிவுகளை சேகரித்து வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். முந்தைய காலங்களில் விவசாயிகள் அதிகளவில் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வந்தனர். சமீபகாலமாக கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் இயற்கை உரம் அதிகளவில் கிடைப்பதில்லை.

அதனால் இயற்கை உரத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுவதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்தது. இயற்கை உரத்துக்காக தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாடுகளை வயல்களில் கிடை போடுவதற்காக திருவையாறு பகுதிக்கு அழைத்து வரப்படுகிறது. திருவையாறு, அம்மன்பேட்டை, நடுக்கடை அதனை சுற்றியுள்ள விளைநிலங்களில் விவசாயிகள் மாட்டு கிடை போட்டு வருகிறார்கள். தரிசு நிலங்களில் பகலில் கால்நடைகள் மேயவிடப்பட்டு, இரவு நேரத்தில் பட்டியில் அடைத்து வைத்து உரங்களை சேகரிக்கின்றனர்.

இதுகுறித்து தொழிலாளி ஒருவர் கூறுகையில்,வயல்களில் அறுவடை பணிகள் முடிந்ததும் மாடுகளை தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக விடுவோம். பகலில் மாடுகளை மேய்ப்போம். இரவு விவசாய வயல்களில் மாடுகளை கிடை வைப்போம். மாடுகளை ஒரு இரவு கிடை வைப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் பெற்று வருகிறோம்.

மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விவசாயிகளிடம் பணம் பெறுகிறோம். தற்போது பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகள் கோடை நெல்சாகுபடியை தொடங்கி உள்ளனர். இதனால் வயல்களில் நடவு நட்டு முடியும் வரையில் பில் வயல்களின் அருகாமையில் தங்கி இருந்து கிடை வைப்போம். விவசாயிகளிடம் நாளுக்கு நாள் இயற்கை உரத்துக்கான ஆதரவு பெருகி வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.