மும்பை இந்தியன்சுக்கு முதல் வெற்றி
29 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்சுக்கு முதல் வெற்றி: ரொமாரியோ அமர்க்களம்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 29 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பன்ட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ரோகித் ஷர்மா, இஷான் கிஷன் இணைந்து மும்பை இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 80 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது.
ரோகித் 49 ரன் (27 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அக்சர் சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த சூரியகுமார் டக் அவுட்டாகி வெளியேற, இஷான் 42 ரன் (23 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அக்சர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 6 ரன்னில் பெவிலியன் திரும்ப, கேப்டன் ஹர்திக் – டிம் டேவிட் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தது. ஹர்திக் 39 ரன் (33 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அன்ரிச் பந்துவீச்சில் பிரேசர் வசம் பிடிபட்டார்.