மருத்துவ உலகில் புதிய மைல் கல்
பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை!
மனிதருக்கு மரபணு மாற்றம் செய்யப்ப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி, மருத்துவ உலகில் புதிய சாதனையைப் புரிந்திருக்கிறார்கள். பொதுவாக ஒருவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் அதற்கு உயிருடனோ அல்லது இறந்து சில மணி நேரங்களுக்குள் பிறரிடம் இருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளைப் பொருத்துவார்கள். மனிதர்களுக்கு மனித உடல் உறுப்புகளையே பொருத்துவார்கள். அறிவியல் ஆய்வில் சில சமயங்களில் வேறு விலங்குகளின் உறுப்புகளை பொருத்தி சோதனை ஆய்வுகளும் நடந்திருக்கின்றன. அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் மனிதருக்குப் பொருத்தப்பட்டு, அது வெற்றிகரமாக செயல்படவும் செய்திருக்கிறது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மருத்துவ உலகின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக, மிக சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. தலைமுடி, கண் தொடங்கி இதயம், தோல் வரை சேதமடையும்போது மாற்று உறுப்பு பொருத்தும் அளவுக்கு மருத்துவ வசதிகள் பெருகிவிட்டன. ஆனாலும் பிற விலங்குகளின் உறுப்புகள் பொருத்தப்படுவது பெரிய அளவில் வெற்றிகரமாக இல்லை. அந்த தடையும் இப்போது நீங்கி சோதனை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.