பூண்டு கார சட்னி செய்முறை
தேவையான பொருட்கள் பூண்டு – 25 பல் சின்ன வெங்காயம் – 15 காய்ந்த மிளகாய் – 8 புளி – கோலிக்குண்டு அளவு உப்பு – தேவையான அளவு கடுகு – 1 டீஸ்பூன் உளுந்து – 1 டீஸ்பூன் கருவேப்பிலை – 1 இனுக்கு நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
செய்முறை
முதலில் பூண்டையும் சின்ன வெங்காயத்தையும் உரித்து தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் வரமிளகாயை போட்டு லேசாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். மிளகாயை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே எண்ணெயில் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு லேசாக வதங்கியதும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு புளி, உப்பு இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.
இப்பொழுது முதலில் மிக்ஸி ஜாரில் நாம் வறுத்து வைத்த காய்ந்த மிளகாயை பொடியாக அரித்துக்கொள்ளுங்கள். பிறகு இதனுடன் நாம் வதக்கி வைத்திருக்கும் பூண்டு சின்ன வெங்காயத்தையும் சேர்த்து தண்ணீர் குறைவாக ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். நன்றாக அரைத்த பிறகு அடுப்பில் கடாயை வைத்து மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட வேண்டும். கடுகு பொரிந்து உளுந்து சிவந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை அந்த கடாயில் ஊற்றி சிறிதளவு தண்ணீரை மிக்ஸி ஜாரில் ஊற்றி கழுவி அதில் ஊற்றி விட வேண்டும். இரண்டு நிமிடம் மட்டும் அடுப்பில் குறைந்த தீயில் அப்படியே இருக்கட்டும். இதை இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டு போகாது. இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம், சாம்பார் சாதம் ஏன் வெறும் சாதத்தில் கூட போட்டு பிரட்டி சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும்.