பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
மோடி மீண்டும் பிரதமரானால் சிலிண்டர் விலை ரூ.5000 ஆகும்:
இந்தியா கூட்டணியின் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து, சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழகத்தின் மீது மோடிக்கு திடீரென பாசம் வந்துள்ளது. தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை வெள்ளம் வந்த போதும், தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் மிதந்த போதும் அவர் எங்கே சென்றார்?. ரூ.37 ஆயிரம் கோடி நிதி கேட்ட தமிழக அரசுக்கு, 3 பைசா கூட வழங்காத பிரதமர், தேர்தல் வந்ததும் தமிழக மக்கள் மீது பாசமாக இருக்கிறேன் என கூறுகிறார். கடுமையான நிதி சுமை இருக்கும் போதும், தமிழக முதல்வர் மக்களுக்கு எண்ணற்ற நல்ல திட்டங்களை செய்து வருகிறார். மத்திய அரசின் பங்களிப்பு, ஒத்துழைப்பு இல்லாமல், மாநில அரசு 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஜிஎஸ்டி எனும் வரியால், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கொள்ளையடித்தது பாஜ அரசு. பாஜ ஆட்சிக்கு வந்த போது ஒரு சிலிண்டர் விலை ரூ.480 ஆக இருந்தது. தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் மோடியை பிரதமராக்கினால் ஒரு சிலிண்டர் விலை ரூ.5000 என மாறும். மோடி ஆட்சியில் தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும், கடந்த பத்து ஆண்டுகளில் வாழ்வாரத்தை இழந்துள்ளனர். கார்ப்பரேட் முதலாளிகள் மட்டும் வளர்ச்சி அடைந்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளை அழிப்பதையே பாஜ குறிக்கோளாக வைத்துள்ளது. பாஜவுக்கு ஆதரவு அளித்ததற்காக தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டவர் ஜெயலலிதா. அவரின் வழித்தோன்றல் என கூறிக்கொண்டு, 5 ஆண்டாக பாஜவிற்கு ஆதரவு அளித்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. கைது நடவடிக்கைக்கு அஞ்சி தான், அதிமுக அரசு பாஜவின் திட்டங்களுக்கு அடிபணிந்தது. அதேபோல் தான், பாமக தங்களை பாதுகாத்து கொள்ள, அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதற்காக, சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது.