கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஒரு பார்வை

வி.ஐ.பி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியான கன்னியாகுமரி தமிழ்நாட்டின் 39 வது மக்களவைத் தொகுதிகளில் கடைசி தொகுதியான கன்னியாகுமரி, கடந்த 2009ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. நாகர் கோவில் மக்களவைத் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபுரம், திருவட்டாறு, விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. புதிய கன்னியாகுமரி தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.

முக்கடலும் சங்கமிக்கும் இடம், மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவற்றால் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கன்னியாகுமரி, தமிழ்நாட்டில் இருந்தாலும் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் தான் இன்றளவும் தொடர்கிறது. கேரள எல்லையில் இருப்பதால், இந்த மாவட்ட மக்களின் வாழ்வியல் மட்டுமின்றி, அரசியல் சிந்தனையும் அம்மாநில மக்களை போலவே உள்ளது. நாடார் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருந்தாலும், அனைத்து தேர்தல்களிலும் சாதிரீதியான வாக்குகளைவிட மதரீதியான வாக்குகளே இந்த தொகுதியில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. மீனவ சமுதாயத்தினரும் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இஸ்லாமியர்கள், வெள்ளாளர், கிருஷ்ணவகை, நாயர், விஸ்வகர்மா, செட்டியார், பட்டியலினத்தவர், யாதவர், மலை சாதியினரும் பரவலாக உள்ளனர்.

பிரதான தொழில்கள்:
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள 54 மீனவ கிராமங்களிலும் மீன்பிடித் தொழில் பிரதானமாக உள்ளது. தென்னை, நெல், வாழை விவசாயம், முந்திரித் தொழிற்சாலைகள் மூலம் மக்கள் வருவாய் பெற்று வருகின்றனர். தினமும் 100 டன்னுக்கு மேல் பூ வர்த்தகம் நடைபெறுகிறது. நேந்திரம் வாழைக்காய் சிப்ஸ் இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், சின்னமுட்டம் ஆகிய நான்கு மீன்பிடித் துறைமுகங்களைத் தங்குதளமாகக் கொண்டு ஆழ்கடலில் பிடிக்கப்படும் தரமான மீன்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் அந்நிய செலவாணியை ஈட்டுகிறது. தெற்காசியாவின் தரமான ரப்பரை உற்பத்தி செய்யும் கன்னியாகுமரியில், இந்த பணியால் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.

கன்னியாகுமாரி தொகுதியின் முக்கிய பிரச்னைகள்:
நலிவடைந்து வரும் ரப்பர் தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்பது மக்களின் பிரதான பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது.நீராதாரங்களைக் கோடைகாலத்துக்குத் தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தும் மேல்நோக்குத் திட்டங்கள் நிறைவேற்றப்படாதது பெரும் குறையாகவே உள்ளது. தென்னை சார்ந்த சிறு தொழிற்சாலைகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. செயற்கை ரப்பர் இறக்குமதி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளத்தின் நெய்யாறு இடதுகரைக் கால்வாய் மூலம் குமரி எல்லைப் பகுதிகளுக்குப் பாசன நீர் வழங்கும் திட்டம், தென்னைசார் தொழிற்சாலை, தோவாளையில் மலர் நறுமணத் தொழிற்சாலை போன்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

நாகர்கோவில் ஆக இருந்தபோது மட்டுமின்றி, கன்னியாகுமரி என பெயர்மாற்றம் செய்யப்பட்ட பிறகும் அங்கு தேசிய கட்சிகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த நான்கு தேர்தல்களில் மூன்று முறை தேசிய கட்சிகள் தான் அங்கு ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

2009 ஹெலன் டேவிட்சன் திமுக

2014 பொன். ராதாகிருஷ்ணன் பாஜக

2019 வசந்தகுமார் காங்கிரஸ்

2021 இடைத்தேர்தலில் விஜய் வசந்த் காங்கிரஸ்

வாக்காளர்கள் விவரம் (2024):
ஆண் வாக்காளர்கள் – 7,72,623

பெண் வாக்காளர்கள் – 7,74,619

மூன்றாம் பாலினத்தவர் – 136

மொத்த வாக்காளர்கள் – 15,47,378

சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?

கன்னியாகுமரி – தளவாய் சுந்தரம் (அதிமுக)

நாகர்கோவில் – எம்.ஆர். காந்தி (பாஜக)

குளச்சல் – பிரின்ஸ் (காங்கிரஸ்)

பத்மநாபபுரம் – மனோ தங்கராஜ் (திமுக)

விளவங்கோடு – காலி தொகுதி

கிள்ளியூர் – ராஜேஷ்குமார் (காங்கிரஸ்)

நாகர்கோவில் சந்திப்பு மற்றும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையங்களில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவது, விமான நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று இருப்பது விஜய் வசந்த் எம்பியின் முக்கிய முயற்சிகளாகும். சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்க நடவடிக்கை எடுத்தது, கேரள மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரியை இணைக்கும் நான்குவழிச் சாலைப் பணிக்காக கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாயை பெற்றுக் கொடுத்தது வரவேற்பை பெற்றுள்ளது. தேர்தல் வாக்குறுதியின்படி, கன்னியாகுமரியில் மீன்வள கல்லூரி அமைக்கப்பட உள்ளது. குறைந்த அளவு திட்டங்களை மட்டுமே மத்திய அரசு அளித்ததாகவும், தனது எம்பி பதவிக்கான ஊதியம் அனைத்தையும் மக்கள் பணிக்காகவே அளித்துள்ளதாகவும் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

முக்கியமான தேர்தல் வாக்குறுதியான ரப்பர் பூங்கா அமைக்காதது, கன்னியாகுமரியை மதுரை ரயில்கோட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நெய்யாறு இடதுகரை கால்வாயில் கேரளா தண்ணீர் திறப்பது தொடர்பான நடவடிக்கை பலனளிக்கவில்லை. கேரளாவில் இருந்து கன்னியாகுமரியை இணைக்கும் நான்குவழிச் சாலை கேரள எல்லை வரை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பகுதிகளில் பூர்த்தியடையவில்லை. நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கேன்சர் சென்டர் அமைப்பது, அரசு விவசாய கல்லூரி, ஐடி நிறுவனம், விமான நிலையம், மீனவர்களுக்கு பேரிடர் காலத்தில் உதவும் வகையில் ஹெலிகாப்டர் தளம், சுற்றுலா தலங்களை மேம்படுத்த தனி திட்டம் ஆகிய விஜய் வசந்தின் வாக்குறுதிகள் எதுவுமே செயல்வடிவம் பெறவில்லை என வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

2024 இல்
நட்சத்திர வேட்பாளர்களான பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன்,

காங்கிரஸ் சார்பில் விஜய்வசந்த் போட்டியிடுவதால் இது வி..ஐ.பி தொகுதியாக பார்க்கப்படுகிறது.

அதிமுக சார்பில் பசிலியான் நசரேத் களத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.