இன்று சூரிய கிரகணம்
இன்று சூரிய கிரகணம்: பகலிலும் எங்கெல்லாம் 4 நிமிடம் இருள் சூழும்? இந்தியாவில் தெரியுமா?
சூரிய குடும்பத்தில் முழு சூரிய கிரகணத்தைக் காணக்கூடிய ஒரே கிரகம் பூமி மட்டுமே.
ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இன்று சூரிய கிரகணத்தைக் காண உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும்.
இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் இருக்கும்.
இந்த சூரிய கிரகணம் கனடா, அமெரிக்கா முதல் மெக்சிகோ வரை தெரியும்.
முந்தைய சூரிய கிரகணங்களை விட இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம் மிக அதிகமாக இருப்பதால், இந்த காலக்கட்டத்தில் பல சோதனைகளை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
அரிய முழு சூரிய கிரகணம்
இந்த நூற்றாண்டில், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும் என்பதிலிருந்து இது எவ்வளவு அரிதான நிகழ்வு என்பதை அறியலாம்.
சந்திரன் சூரியனை விட பூமிக்கு 400 மடங்கு நெருக்கமாக உள்ளது, ஆனால் சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியது.
இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக வரும்போது, அது சூரியனை மறைப்பதல் நாம் கிரகணத்தைக் காண்கிறோம்.
சூரிய கிரகணத்தைப் பொறுத்தவரை சில நேரங்களில் தெரியும், சில நேரங்களில் தெரியாது. இந்த சூரிய கிரகணம் முக்கியமானது.
ஏனெனில், இந்த நிகழ்வை லடசக்கணக்கான மக்கள் காண முடியும். இந்த கிரகணத்தை 31 லட்சம் பேர் பார்க்க முடியும் என ஒரு மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள என்.சி. ஸ்டேட் பல்கலைக்கழகம், இந்த கிரகணத்தின் போது வனவிலங்குகளுக்கு ஏற்படும் விளைவு குறித்து ஆய்வு செய்யவுள்ளது. இந்த ஆய்வில், டெக்சாஸ் மாகாண உயிரியல் பூங்காவில் உள்ள 20 விலங்குகளின் நடத்தை ஆய்வு செய்யப்படும்.
நாசாவின் எக்லிப்ஸ் சவுண்ட்ஸ்கேப்ஸ் (Eclipse Soundscapes) திட்டமும் விலங்குகளின் நடத்தையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
கிரகணத்தின் காரணமாக ஏற்படும் முழு இருளில் விலங்குகளின் சத்தம் மற்றும் அவற்றுக்கு ஏற்படும் விளைவுகளைப் பதிவு செய்ய மைக்ரோஃபோன் போன்ற சிறிய உபகரணங்களை பொருத்துவதும் இத்திட்டத்தில் அடங்கும். இன்றைய சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழும் என்பதால், இந்தியாவில் அதனை பார்க்க முடியாது.