மயிலாடுதுறை மக்களவை தொகுதி ஒரு பார்வை
தமிழகத்தில் காவிரி கடைமடை தொகுதியாக இருக்கும் மயிலாடுதுறை லோக்சபா தொகுதி கடந்த 1951-ம் ஆண்டு மாயூரம் தொகுதி என்று அழைக்கப்பட்டு இரட்டை உறுப்பினர் முறையில் இருந்து தொடங்கியது. அதன்பின்பு மயிலாடுதுறை தொகுதியாக மறுவியது. அப்போது மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், குத்தாலம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கியதாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்பின்போது குத்தாலம் சட்டசபை தொகுதி நீக்கப்பட்டதால் அதற்கு பதிலாக பாபநாசம் சட்டசபை தொகுதி மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் இணைக்கப்பட்டு, கடந்த 2009 தேர்தலை சந்தித்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி 11 முறையும், திமுக 3 முறையும், அதிமுக 2 முறையும் இதுவரை வெற்றி பெற்றுள்ளன.
சட்டமன்ற தொகுதிகள்: மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் உட்பட்டவை. அவை மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகும்.
மயிலாடுதுறை – காங்கிரஸ்
சீர்காழி – திமுக
பூம்புகார் – திமுக
கும்பகோணம் – திமுக
பாபநாசம் – மமக
திருவிடைமருதூர் – திமுக
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெட்ரோலித்துறை மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் இருந்துள்ளார். இவர் மயிலாடுதுறை தொகுதியில் 1991, 1999, 2004 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.பியாக இருந்தார். கடந்த 2009 தேர்தலில் தோல்வியை தழுவினாலும் கட்சி மேலிடம் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை வழங்கியது.
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள்
1951 இரட்டைஉறுப்பினர் ஆனந்த நம்பியார் கம்யூனிஸ்ட், சந்தானம் காங்கிரஸ்
1962 (தனி) மரகதம் சந்திரசேகர் காங்கிரஸ்
1967 (தனி) சுப்ரவேலு தி.மு.க
1971 (தனி) சுப்ரவேலு தி.மு.க
1977 – குடந்தை ராமலிங்கம் – காங்கிரஸ்
1980 – குடந்தை ராமலிங்கம் – காங்கிரஸ்
1984 – பக்கீர் முகம்மது – காங்கிரஸ்
1989 – பக்கீர் முகம்மது – காங்கிரஸ்
1991 – மணிசங்கர் அய்யர் – காங்கிரஸ்
1996 – பி.வி. இராஜேந்திரன் – தமிழ் மாநில காங்கிரஸ்
1998 – கிருஷ்ணமூர்த்தி – தமிழ் மாநில காங்கிரஸ்
1999 – மணிசங்கர் அய்யர் – காங்கிரஸ்
2004 – மணிசங்கர் அய்யர் – காங்கிரஸ்
2009 – ஓ. எஸ். மணியன் – அதிமுக
2014 – ஆர். கே. பாரதி மோகன் – அதிமுக
2019 –ராமலிங்கம் – திமுக
மயிலாடுதுறை தொகுதியில் 1967, 1971 ஆகிய தேர்தல்களில் திமுகவை சேர்ந்த சுப்ரவேலு எம்.பியாக இருந்தார். கடந்த 1984, 1989, 1991 ஆகிய 3 மக்களவைத் தேர்தல்களில் மயிலாடுதுறையில் போட்டியிட்ட திமுக தோல்வியை அடைந்தது. அதன்பின்பு தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கே இந்த தொகுதியை ஒதுக்கிவந்த நிலையில் 2019 மக்களவைத் தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிட்டது. 48 ஆண்டுகளுக்கு பிறகு 2019 தேர்தலில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 2,61,314 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு முன்னர் 2 முறையாக தொடர்ந்து அதிமுக வசம் இருந்த இந்த தொகுதியை கடந்த தேர்தலில் திமுக கைப்பற்றியது.
கடந்த தேர்தல் வரலாறு
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 14,84,346 மொத்த வாக்குகளில், 10,97,780 வாக்குகள் பதிவானது. இதில், 8231 வாக்குகள் நோட்டா என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் 5,99,292 வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.ஆசைமணியை விட 2,61,314 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்
2024 ஜனவரி 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15,38,351 வாக்காளர்கள் உள்ளனர். அதன் விபரம் வருமாறு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,71,043 ஆண்கள், 3,79,639 பெண்கள் மற்றும் இதர வகுப்பினர் 23 பேர் என மொத்தம் 7,50,705 வாக்காளர்கள் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,85,803 ஆண்கள், 4,01,797 பெண்கள் மற்றும் 46 இதரர் பேர் என மொத்தம் 7,87,646 வாக்காளர்கள் உள்ளனர். மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக அளவில் உள்ளனர்.
தொகுதியின் நீண்ட கால கோரிக்கைகள்
- கும்பகோணம் மகாமக பெருவிழாவை தேசிய விழாவாக அறிவித்து, அரசு எடுத்து நடத்த வேண்டும்.
- இரு வழிப்பாதைகள் அமைத்து ரயில் சேவையை விரிவாக்கம் வேண்டும்.
- மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி வழியாக காரைக்கால் வரை ரயில் சேவை தொடங்க வேண்டும்.
- பக்கிங்காம் கால்வாயை முறையாக தூர்வாரி நீர்வழிப் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும்.
- பூம்புகார், தரங்கம்பாடி சுற்றுலாத் தலங்களை நவீன வசதியுடன் பன்னாட்டு தரத்திற்கு மேம்படுத்த வேண்டும் .
- மண் அரிப்பை தடுக்க கடற்கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
- தொகுதியில் உள்ள பழைய, புதிய மீன்பிடித் துறைமுகங்களை விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டும்.
- தலைஞாயிறு சர்க்கரை ஆலையை சீரமைத்து மீண்டும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- கொள்ளிடம் ஆற்றில் மாதிரிவேளூர்- நலன்புத்தூர், அளக்குடி- திருக்கழிப்பாலை இடையே 2 இடங்களில் கதவனை அமைக்க வேண்டும்.
- கடல் நீர் உட்புகாதவாறு உப்பனாறுகளில் கதவணைகள் அமைக்க வேண்டும்.
- 4 வழி சாலை பணிகளை விரைவு படுத்த வேண்டும்.
- விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.
- நெசவு, உலோகப் பொருட்கள், மண்பாண்டம் தயாரிப்பு தொழில்களை மேம்படுத்த மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் வேண்டும்.
- குத்தாலம் பகுதியில் தொழிற்சாலை மாசுகளை தடை செய்ய வேண்டும்.
- விவசாய விளை பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
- ஆறு, வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயிகள் பங்களிப்புடன் முழுமையாக தூர்வார வேண்டும்.
- திருமுல்லைவாசல்- கீழமூவர்கரை இடையே நீண்ட ஆண்டுகளாக இணைக்கப்படாமல் உள்ள பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும்,
- மயிலாடுதுறை அருகே மாப்படுகை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ கிராமங்களுக்கு தடையின்றி இன்றி கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும்.
- செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தை பிரிக்க வேண்டும்.
- சீர்காழியை பிரித்து கொள்ளிடம் புதிய தாலுக்கா உருவாக்க வேண்டும்.
- மயிலாடுதுறை, சீர்காழி நகரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரிங் ரோடுகள் அமைக்க வேண்டும்.
- சீர்காழி பாதாள சாக்கடை அமைக்க வேண்டும்.
- மயிலாடுதுறை, சீர்காழி நகர் பகுதிகளுக்கு முழுமையான கொள்ளிடம் குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
- மயிலாடுதுறை பாதாள சாக்கடை சீர்கேட்டை சரி செய்ய வேண்டும்.
- பெருந்தோட்டம் திருவாலி ஏரிகளை சீரமைத்து சுற்றுலா தளமாக்க வேண்டும்.
- கொள்ளிடம் ஆற்றின் கரையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்ட காலங்களாக நிலுவையில் உள்ளது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி சிறப்பு என்பது கோயில்கள். தொன்மையையும், சிற்பக்கலையின் நுட்பத்தையும் உணர்த்தும் ஆயிரக்கணக்கான கோயில்களை தன்னகத்தே கொண்டது மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி. மேலும் நவக்கிரக தலங்களில் இரண்டைத் தவிர அனைத்தும் இந்த தொகுதியிலேயே உள்ளன. அதன் விபரம்.
மாயூரநாதர் கோயில், மயிலாடுதுறை
பரிமளரெங்கநாதர் கோயில், திருஇந்தளுர், மயிலாடுதுறை
சட்டநாதர் கோயில், சீர்காழி
சூரியனார்கோயில், திருவிடைமருதூர் (நவக்கிரக ஸ்தலம்-சூரியன்)
வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி தொகுதி (நவக்கிரக ஸ்தலம்-செவ்வாய்)
திருவெண்காடு, (நவக்கிரக ஸ்தலம்-புதன்)
ஆலங்குடி, கும்பகோணம் (நவக்கிரக ஸ்தலம்-குரு)
கஞ்சனூர், திருவிடைமருதூர் (நவக்கிரக ஸ்தலம்-சுக்கிரன்)
கீழப்பெரும்பள்ளம், பூம்புகார் தொகுதி (நவக்கிரக ஸ்தலம்-கேது)
திருநாகேஸ்வரம்
கும்பேஸ்வரர் கோயில், கும்பகோணம்
திருக்கருக்காவூர், பாபநாசம் .
மயூரநாதர் கோயில்
2024 இல் பாமக சார்பில் ஸ்டாலின்
அதிமுகவில் பாபு
காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா போட்டியில் உள்ளனர்.