புதிய முறையிலான தேர்தல் விழிப்புணர்வு
தேவகோட்டை பள்ளி மாணவர்கள் அசத்தல்
அஞ்சல் அட்டை மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்
ஓட்டுப்போடும் வரை பெற்றோரை தூங்கவிடாதீர்கள்
வருவாய் கோட்டாட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் புதிய முறையில் அஞ்சல் அட்டை மூலம் பெற்றோருக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தேர்தலில் 100 சதவிகித வாக்காளர்களை வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.இதன் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரிடமும் தங்கள் பெற்றோருக்கும்,அதே வகுப்பில் பயிலும் மற்ற மாணவ நண்பர்களின் பெற்றோர்கள் வீட்டு முகவரிக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தபால் அட்டை வழியாக பெற்றோர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு கடிதம் எழுதினார்.
அதில் "விலை மதிப்பில்லா வாக்கினை மறவாதீர் ,அனைவரும் 100% வாக்களித்து இந்திய ஜனநாயகத்தை வலுபடுத்துங்கள் " தேர்தல் நாள் ஏப்ரல் -19 என்ற வாசகத்தை அட்டையில் எழுதி வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை பள்ளிக்கு வந்து மாணவர்களின் விழிப்புணர்வு உத்தியைப் பார்வையிட்டு வாழ்த்தினர்.
அப்போது அவர் பேசுகையில்,மாணவர்கள் அனைவரும் உங்களின் பெற்றோரிடம் அன்பாக பேசி அவர்களை ஓட்டுப்போடும் வரை தூங்கவிடாதீர்கள்.
பல கிராமங்களில் தேர்தல் நாள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் முயற்சிகள் எடுத்து வருகிறது.அந்த வகையில் அஞ்சல் அட்டை மூலம் பள்ளி மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு என்கிற புதிய முயற்சி பாராட்டுக்குரியது. என்று பேசினார்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் செய்து இருந்தனர்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி புதிய முறையில் அஞ்சலட்டை மூலம் தங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி அனுப்பி, தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.