அதிபர் மூயிஸ் தகவல்
மாலத்தீவில் இந்திய படை வெளியேற்றம் தொடரும்:
மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படையின் 2வது குழு இந்த மாதத்துக்குள் வெளியேறும் என்று அந்நாட்டு அதிபர் மூயிஸ் தெரிவித்துள்ளார். மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக 2 அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், ஒரு டார்னியர் விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக அதிபராக மூயிஸ் பதவியேற்ற பிறகு, அங்குள்ள இந்திய வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் இந்தியா, மாலத்தீவு இடையிலான உறவில் சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்நிலையில், கடந்த பிப். 2ம் தேதி டெல்லியில் இரு நாடுகளுக்கு இடையே உயர்நிலை குழு கூட்டம் நடந்தது.
இதற்கு பின்னர், நடப்பாண்டு மே 10ம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் முற்றிலும் திரும்ப பெறப்படுவார்கள் என்று மாலத்தீவு வெளியுறவு துறை தெரிவித்தது. அதேவேளையில், மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானத்தை பராமரித்து இயக்க, இந்திய ராணுவ வீரர்களுக்கு பதிலாக நிபுணத்துவம் பெற்றவர்களை அந்நாட்டுக்கு ஒன்றிய அரசு அனுப்ப மாலத்தீவு ஒப்பு கொண்டது. இதையடுத்து மாலத்தீவில் இந்தியா வழங்கிய ஹெலிகாப்டருக்கு பொறுப்பேற்க ராணுவம் அல்லாத 26 பேர் அடங்கிய குழுவை ஒன்றிய அரசு அனுப்பி வைத்தது.