ஐபிஎல் தொடரில் இரண்டு அட்டவணையை பிசிசிஐ
நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ மாற்றியமைத்துள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 17 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டி ஒரு நாள் முன்னதாக (ஏப்ரல் 16) நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் இடையேயான போட்டிக்கான அட்டவணையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு போட்டிகளுக்கான அட்டவணை திருத்தத்துக்கான காரணம் எதுவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
ராம நவமியின் காரணமாக போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டதற்கான எந்த ஒரு காரணத்தையும் பிசிசிஐ தெரிவிக்கவில்லை.
ஐபிஎல் அட்டவணை திருத்தம் தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஏப்ரல் 17 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேய நடைபெறவிருந்த போட்டி ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெறும்.
ஏப்ரல் 16 ஆம் தேதி அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் மற்றும் தில்லி அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டி ஏப்ரல் 17 ஆம் தேதி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.