விழுப்புரம் மாவட்ட தேர்தல்துறை சார்பில்
விழுப்புரம் மாவட்ட தேர்தல்துறை சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி கோட்டக்குப்பம் நகராட்சி தந்திராயன்குப்பம் கடற்கரையில் மணல்சிற்பம் உருவாக்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நகராட்சி ஆணையர் புகேந்திரி வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் அகிலேஷ் குமார் மிஸ்ரா, திருவோந்திரா கெஞ்சி, ராகுல் சிங்கானியா ஆகியோர் கலந்துகொண்டு கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு மணல் சிற்பங்களை பார்வையிட்டனர்.
நூறு சதவீத வாக்கு அளிக்க வேண்டிய லோகோ மற்றும் தமிழ்நாடு அரசு சின்னம், இந்திய வரைபடம் ஆகியவை மணல் சிற்பத்தால் உருவாக்கப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களிடம் விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் தேர்தல் அதிகாரிகள் படகில் சென்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கடலோர காவல் படை, வருவாய் துறையினர் மற்றும் சின்ன முதலியார்சாவடி, தந்திராயன்குப்பம், சோதனைகுப்பம், நடுக்குப்பம், பொம்மையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.