மிளகாய் சாகுபடியில் அசத்தல் வருமானம்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுக்கா, அரப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் தனக்குச் சொந்தமான குறைந்த அளவு நிலத்தில் மிளகாய், நிலக்கடலை, நெல் போன்ற பயிர்களைப் பயிரிடுவதோடு, கால்நடைகளையும் வளர்த்து ஒருங்கிணைந்த பண்ணையம் நடத்தி வருகிறார். இதன்மூலம் நல்ல வருமானமும் பார்த்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் ரங்கநாதனைச் சந்தித்தோம். “எஸ்எஸ்எல்சி வரை படித்திருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போதே மாலையில் வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவுக்கு துணையாக தோட்டத்திற்கு சென்று களை எடுப்பது, தண்ணீர் பாய்ச்சுவது போன்ற பணிகளை செய்வேன். அப்பாவுக்கு உடல்நிலை முடியாமல் போகவே, விவசாய வேலைகளை நானே முழுமையாக பார்க்கத் தொடங்கி விட்டேன். எங்களுக்குச் சொந்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கிறது. அருகில் இருக்கும் 50 சென்ட் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து மொத்தம் இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன்.
இரண்டு ஏக்கர் நிலத்தில் 60 சென்டில் கடலை, 20 சென்டில் மிளகாய், 1 ஏக்கரில் நெல் ஆகியவற்றைப் பயிரிட்டு இருக்கிறேன். இதில் எனக்கு அதிக மகசூல் கொடுக்கும் பயிர் என்றால் அது மிளகாய்தான். குறைந்த இடத்தில் பயிரிட்டாலும் நிறைவான மகசூல் கிடைக்கிறது. நான் இங்கு நாட்டு ரக மிளகாயைப் பயிரிட்டு இருக்கிறேன். 20 சென்ட் நிலத்தில் மிளகாய் பயிரிடுவதற்கு 7 முடிச்சு வரை நாற்றுகள் தேவைப்படும். ஒரு முடிச்சில் 100 நாற்றுகள் இருக்கும். எங்கள் நிலத்திற்கு தேவையான நாற்றுகளை நாங்களே பதியம் போட்டு நடவு செய்கிறோம். இதற்கு முன்பு பொன்னி நெல்லைப் பயிரிட்டிருந்தேன். செம்மண், மணல் கலந்த நிலம் என்பதால் நெற்பயிரை அறுவடை செய்தபோது மண் மீண்டும் பொலபொலவென்று மாறிவிட்டது. இதனால் டிராக்டரை வைத்து மூன்று முறை மட்டுமே உழவு ஓட்டினேன். முதல் உழவினை மடக்கி உழுதேன். இதனால் ஏற்கனவே அறுவடை செய்த நெற்பயிரின் வேர்கள் நிலத்திற்கு உரமாக பயன்படும். இரண்டாம் உழவின்போது தண்ணீர் அதிகம் விட்டு நிலத்தினை நன்கு ஈரப்படுத்தினேன். மூன்றாம் உழவின்போது 4 மூட்டை மக்கிய எரு தொழுவுரத்தைப் போட்டோம்.
ஏற்கனவே பதியம் போட்டு வைத்திருந்த நாற்றுகளை எடுத்து நிலத்தில் 7 செ.மீ அளவிற்கு குழி தோண்டி நடவு செய்தேன். நாற்றுகளை நடவு செய்த 5வது நாளில் செடிகள் நன்கு வேர்பிடித்து வளரத் தொடங்கிவிடும். இதிலிருந்து 10வது நாளில் முதல் களை எடுப்போம். களையை இயந்திரங்கள் கொண்டு எடுக்காமல் ஆட்களைக் கொண்டு எடுப்பது நல்லது. அப்போதுதான் செடிகளில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. செம்மண் பூமி என்பதால் அதிக களை வளரும். அதனால் 10 நாட்களுக்கு ஒருமுறை களை எடுப்பது மிகவும் அவசியம். களை எடுக்க தவறினால் மிளகாய்ச் செடிகளின் வளர்ச்சி தடைபடும். இதுபோக பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகும். களை எடுக்கும்போது தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. மிளகாய் சூடான பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது என்பதால் அதிக தண்ணீர் தேவைப்படாது.