சீனா பெயர் வைத்துள்ளதால் சர்ச்சை
அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா பெயர் வைத்துள்ளதால் சர்ச்சை
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா பெயர் வைத்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த மாநிலத்தை ஆக்கிரமிக்க, சீனா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என, ஒன்றிய அரசு உறுதியாக கூறி வருகிறது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஊர்கள், மலைகளுக்கு சீன அரசு சீன மொழி பெயர்களை சூட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலில் உள்ள இடங்களுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக 4வது பட்டியலை சீன அரசு வெளியிட்டுள்ளது.
அருணாச்சலத்தில் ஏற்கனவே சில இடங்களுக்கு சீனா பெயர் சூட்டிய நிலையில் மேலும் 30 இடங்களுக்கு பெயர் சூட்டியது. ஊர்கள், மலைகள், ஆறுகள் என 30 இடங்களுக்கு சீன மொழி பெயர்களை சூட்டியிருக்கிறது. 11 குடியிருப்புகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஏரி, மலைக்கு மாண்டரின் மொழியில் பெயர் சூட்டப்பட்டது. மாண்டரின், திபெத்திய மொழியில் புதிய பெயர் சூட்டியதாக சீனாவில் உள்ள நாளிதழ் செய்தி வெளியிட்டது. சீனாவின் பெயர் சூட்டல் நடவடிக்கையால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா இதற்கு முன்பு 3 முறை மறு பெயர் வைத்து பட்டியலை வெளியிட்டுள்ளது.
2017ல் வெளியிட்ட முதல் பட்டியலில் 6 இடங்களுக்கும், 2021ம் ஆண்டில் 15 இடங்களுக்கு மறு பெயரிட்டு இரண்டாவது பட்டியலையும், 2023ம் ஆண்டில் 11 இடங்களுக்கான பெயர்களுடன் 3வது பட்டியலையும் வெளியிட்டது. அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்காவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாச்சலத்தை சீனா உரிமை கொண்டாடவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.