கோடைக்கால உணவு முறை!

நீராகாரம்

இரவில் உண்டதுபோக மீந்த உணவில் தண்ணீரை ஊற்றி வைத்து அந்தச் சோற்றைக் கெட்டுப்போகாமல் பாதுகாப்பர். காலை வரை சோறு நீரில் ஊறுவதால் சோற்றின் சாரம் நீரில் கலந்திருக்கும். அந்த நீரையே நீராகாரம் என்கிறார்கள். அந்த நீரைத் தனியே ஊற்றி உப்பிட்டுக் குடிப்பது வழக்கம். ஒருசிலர் அதில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஊற்றிக் குடிப்பதும் உண்டு. கரும்பு அறுவடைக்குச் செல்பவர்கள், வயலில் வேறு வேலைகளுக்குச் செல்பவர்கள் என நாட்டுப்புற மக்கள் பெரும்பாலும் அதிகாலையில் நீராகாரம் குடித்துவிட்டுச் செல்லும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். நீராகாரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் என்று நம்புகின்றார்கள். மேலும் வயல்வெளியில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் பத்து மணிக்குத்தான் காலை உணவு உண்ணும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அதுவரை பசியைக் கட்டுப்படுத்துவது நீராகாரமே. நீராகாரம் குடிப்பது உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தடுக்கவல்லது என நவீன மருத்துவ ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. மற்ற நாட்களில் தேநீர், காப்பி ஆகியவற்றைக் குடிக்கும் பழக்க முடையவர்கள் கூட கோடைக்காலத்தில் நீராகாரமே குடிக்கிறார்கள். “நெனப்பு பொழப்பக் கெடுத்ததாம் நீராகார தண்ணி உப்ப கெடுத்ததாம்”என்று நீராகாரம் குறித்த வழக்காறு ஒன்றும் உண்டு. அதிக மதுரமான நீராகாரத் தெளிவு நீரானது வாத பித்த கப வறட்சிகளையும், தாகத்தையும் போக்கும், சுக்கிலத்தை அதிகப்படுத்தி அழகைக் கொடுக்கும் என நீராகாரத்தின் மருத்துவக்குணங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன.


காடி

சோறு வடித்த கஞ்சியைச் சிறிய மண்பானையில் ஊற்றி, அதில் தேவையான அளவு நீரூற்றி உப்பிட்டு மூடிவைத்து புளிக்கச் செய்து பக்குவப்படுத்தப்பட்டதையே காடி என்கிறார்கள். இதற்கென்று தனிப்பானையைப் பயன்படுத்துகிறார்கள். அந்தப் பானையில் சிறிதளவு காடி இருக்கும்போதே, மேலும் கஞ்சியும் நீரும் ஊற்றப்படும். இவ்வாறு தினமும் வடிக்கப்படும் கஞ்சியையும் அதற்கேற்ப நீரையும் ஊற்றி ஊற்றி புளிக்கச் செய்து குடிப்பர். அமாவாசைக்கு அமாவாசை அப்பானையைக் கழுவி திருநீற்றுப் பட்டையிட்டு வைக்கிறார்கள். இப்படிப் புளிக்கச் செய்த காடி குடிப்பதற்குக் கள் போல இருக்கும் என்கிறார்கள். பண்டைத் தமிழர்கள் வீட்டிலேயே அரிசியினைக் கொண்டு கள் தயாரித்ததையும் அது ‘இல்லடுகள்’ என்று குறிப்பிடப் படுவதையும், தோப்பி என்ற அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட கள் ‘தோப்பிக்கள்’ என வழங்கப் பட்டதையும் இங்கு ஒப்பிடலாம். காடி நீர் சோகை நோய், பித்த மயக்கம், அசீரணம், வாதாதி சாரம் ஆகியவற்றைப் போக்கும் குணமுடையது. ஆனால் சிறந்த மருந்துகளின் நற்பண்புகளைக் கெடுக்கும் என பதார்த்த குணசிந்தாமணி குறிப்பிடுகிறது.

மோர்

“நீர் சுருக்கி, மோர் பெருக்கி, நெய்யுருக்கி உண்பார்தம் பேருரைக்கில் போமே பிணி”என்பது சித்தர் வாக்கு.நாட்டுப்புற மக்கள் கோடைக்காலத்தில் மோரை விரும்பிக் குடிக்கிறார்கள். வெயிலில் அலைவதனால் ஏற்படும் களைப்பை நீக்க மோர் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் மருந்துப் பொருளாகவும் மோர் பயன்படுகிறது. வெண்ணெயை எடுப்பதன் மூலம், கொழுப்புச்சத்து குறைவாக உள்ள மோர், கொழுப்பு உயர்வால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கவும் பயன்படுகிறது. கோடைக்காலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மோர் கொடுக்கும் வழக்கம் இன்றும் பல இடங்களில் காணப்படுகிறது. ஒருசிலர் பசுமோரையும் ஒருசிலர் எருமை மோரையும் பயன்படுத்துகிறார்கள். பசுமோர் வீக்கம், பெருவயிற்று நோய், வயிற்றுவலி, பாண்டு நோய், பித்த நோய், இடுமருந்தால் வரும் நோய்கள், பேதி, கிரிதோஷம், அக்னிமாந்தம், வெப்பம், நீர்வேட்கை இவைகளை நீக்கும். எருமை மோரினால் தாகம், கிராணி நோய், சகல கழிச்சல், காமாலை, கிருமி ஆகியவை நீங்கும். பாலைக் காய்ச்சி மிதமான சூட்டில் சில துளி மோரை அதில் ஊற்றி பாலைத் தயிராக்குவர். இதற்கு உறை (பிரை) ஊற்றுதல் என்று பெயர். மாலை நேரத்தில் விளக்கு வைத்த பிறகு பிரைமோர் கொடுப்பதில்லை, கேட்பதுமில்லை. விளக்கு வைத்த பிறகு பிரைமோர் கொடுக்கக் கூடாது என்று ஒரு நம்பிக்கை கிராமப்புறங்களில் உண்டு.

இளநீர்

தென்னை மரத்தில் வீரிய ஒட்டு ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு, மூன்று ஆண்டுகளில் பலன் தரும் தென்னங்கன்றுகள் அறிமுகமானதில் இருந்து தென்னை வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. நாட்டுப்புற மக்களிடமும் தென்னை வளர்க்கும் பழக்கம் அதிகரித்து இருக்கிறது. கோடையில் இளநீர் குடிக்கும் வழக்கம் அனைவரிடமும் காணப்படுகிறது. இளநீரில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் நிறைந்து இருக்கின்றன. அதனை ஊசியின் மூலம் நேரடியாக இரத்தத்தில் கலக்கலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக இயற்கை மருத்துவர் ஏ.வி.ஜி.ரெட்டி குறிப்பிடு கிறார். இளநீருக்கென்று தனித்தென்னை மரங்கள் கூட வந்துவிட்டன. அதில் இளநீர் மட்டுமே காய்க்கும். அது தேங்காயாக மாறாது.இளநீர் வாத, பித்த நோய்களைக் குணமாக்கி மனதைக் தெளிவாக்குவதுடன், உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து அனலைப் போக்கும். பித்த வாந்தி, நீர்பேதி ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்ட இளநீர் நம் காலத்து அமுதமாகவே பார்க்கப்படுகிறது. இளநீரில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் சில விசேஷத்தன்மைகளும் இருக்கின்றன.

செவ்விளநீர்

நாள்தோறும் செவ்விளநீரை உட்கொண்டால் பித்த மிகுதி, நீர் வேட்கை, வழிநடையில் வரும் இளைப்பு, அயர்வு, கப நோய்கள் ஆகியவற்றைப் போக்கும்.

புதிய இளநீர்: புதிய இளநீரின் வழுக்கை, நீர் இவ்விரண்டையும் உண்பவர்க்கு மிகுதியான பித்தம் விலகும்.

பழைய இளநீர்: பழைய இளநீரை உட்கொண்டால் சளி பிடித்தல், தலைக் கனம் போன்ற பற்பல நோய்களை உண்டாக்கும்.

பச்சை இளநீர்: இந்த இளநீரினால் மேகம், நாள்பட்ட சுரம், கப ஆதிக்கம், எரிகிருமி, யானைச் சொரி, கண் நோய் ஆகியவை குணமாகும்.

கேளி இளநீர்: கேளி இளநீரை உண்பவர்க்கு ரத்தமேகம், மலக்கிருமி, பொறுக்க இயலாத நீர்வேட்கை, மண்டாக்கினி கரப்பான், காய்ச்சல் முதலிய நோய்கள் குணமாகும்.

மஞ்சள் சுச்சி இளநீர்: மஞ்சள் கச்சி இளநீரை அருந்தினால் பித்த தோடம், சோகை, கபப்பெருக்கம் ஆகியவை விலகும்.

அடுக்கிள நீர்: இரவு படுப்பதற்கு முன் இவ்விள நீரை உட்கொண்டால் கபக் குற்றமும், மலப்பையைப் பற்றிய கிருமியும் நீங்கும்.

கருவின் நீர்: கருமை நிற இளநீரினால் கபப் பெருக்கமும், புழு நெளிகின்ற கரப்பானும் நீங்கும், உடல் ஒளியும் மகிழ்ச்சியும் உண்டாக்கும்.

சோரியிள நீர்: செவ்விள நீரின் இன்னொரு வகையான ரத்த வண்ண இளநீரே சோரியிளநீர் எனப்படுகிறது. இதனால் வீக்கமும், வயிற்றில் உள்ள பூச்சியும், சன்னக் கிருமியும் போகும். உடல் அழகு பெறும்.

ஆயிரங்கச்சி இளநீர்: ஆயிரங்கச்சி இளநீரால் வெப்பமும், பசியும், வாத கப துந்தமும், நமைச்சலும், கீழ் விரணம், வயிறு தொடர்பான நோய்களும் குணமாகும்.

குண்டற்கச்சி இளநீர்: குண்டற்கச்சி இளநீரால் சுவையின்மை, நீர் வேட்கை ஆகியவை போகும். பசியை உண்டாக்கும்.இளநீரை பொதுவாக உணவு உண்பதற்கு முன்பு உட்கொண்டால் பசி நீங்கும். செரிப்பின்மை உண்டாகும். மாலையில் உட்கொண்டால் கிருமிகள் ஒழியும்.உணவு உட்கொண்ட பிறகு இளநீரை உட்கொண்டால் உடலின் வெப்பம் சீராகும். தாராளமாய் மலங்கழியும், அதிக பசி உண்டாகும். நோய் அணுகாது. உடல் மினுமினுக்கும்.

Leave a Reply

Your email address will not be published.