உயர் விளைச்சல் தரும் உளுந்து ரகங்கள்
வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. கோடைக்காலத்தில் பெரும்பாலும் நீர்நிலைகள் வறண்டு வறட்சி தாண்டவமாடும். மழைப்பொழிவும் அதிகளவில் இருக்காது. இந்த சமயத்தில் விவசாயம் செய்வது என்பது சவாலான விசயம்தான். ஆனால் கோடைக்காலத்திலும் சாகுபடி செய்ய சில ஏதுவான பயிர்கள் இருக்கின்றன. அதில் உளுந்துப் பயிர் முதன்மை இடத்தைப் பிடிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, கோடையிலும் வருமானம் ஈட்டும் வகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம் உளுந்து வம்பன் 8 மற்றும் உளுந்து வம்பன் 11 ஆகிய இரண்டு ரகங்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த 2 ரகங்கள் குறித்து விளக்கமாக விவரிக்கிறார் வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையத்தின் பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல் வல்லுநர் ப.ராமகிருஷ்ணன்.
விதைப்பு
இந்த ரகங்களை சாகுபடி செய்ய ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டசிம் அல்லது திராம் அல்லது டிரைக்கோடெர்மா 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் எடுத்து விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதை நேர்த்தி செய்ய வேண்டும். பூஞ்சாண கொல்லியுடன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் மீண்டும் உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்யப்படுவதற்கு 24 மணி நேர இடைவெளி வேண்டும். ஒரு எக்டருக்கு தேவையான விதையுடன் 600 கிராம் ரைசோபியம் மற்றும் 600 கிராம் பாஸ்போபாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்து 15-30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும். அல்லது மண்ணில் இடுவதற்கு 2 கிலோ அளவில் ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை 25 கிலோ தொழுஉரம் அல்லது மணலுடன் கலந்து கடைசி உழவின்போது இட வேண்டும். பின்பு வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும், செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும். சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
உர நிர்வாகம்
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை விதைப்பதற்கு முன்பு அடியுரமாக வயலில் இட வேண்டும். விதைக்கும் முன் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ தழைச்சத்து (22 கிலோ யூரியா), 20 கிலோ மணிச்சத்து (125 கிலோ சூப்பர் பாஸ்பேட்), 10 கிலோ சாம்பல் சத்து (17 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ்) மற்றும் 10 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றை ஒரே சீராக அடி உரமாக இட வேண்டும். மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரமாக இடுவதனால் கந்தகச்சத்து தனியாக இட வேண்டிய அவசியமில்லை. ஆனால் டை-அம்மோனியம் பாஸ்பேட் (டி.ஏ.பி) உரம் இடும்பொழுது பயிருக்குத் தேவையான கந்தகச்சத்தை ஜிப்ஸம் (45 கிலோ) உரம் மூலம் அளிக்க வேண்டும். மேற்கூறிய உரங்களை ஒன்றாக இடுவதன் மூலம் பயிரின் விளைச்சல் அதிகரிக்கும்.
நீர் நிர்வாகம்
பயிருக்குத் தேவையான நீரை விதைத்தவுடன் ஒரு உயிர்த் தண்ணீரும், மூன்றாம் நாள் மற்றொரு உயிர்த் தண்ணீரும் அவசியம் பாய்ச்ச வேண்டும். பின்னர் காலநிலை மற்றும் மண்வாகுக்கு ஏற்ப 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். பூக்கும்போதும், காய்க்கும்போதும் தகுந்த நீர் நிர்வாகம் முக்கியம். பூக்கும் பருவம் முதல் காய்கள் முற்றும் பருவம் வரை நிலத்தைக் காய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
களை நிர்வாகம்
களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு விதைத்த மூன்றாம் நாள் பெண்டிமெத்திலின் களைக்கொல்லி மருந்தை ஏக்கருக்கு 1.3 லிட்டர் அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்தபின் நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்பு விதைத்த 20-25 நாட்களில் ஒரு கைக்களையும் எடுக்க வேண்டும். அல்லது விதைத்த 15ஆம் நாள் இமாஸ்திபயர் களைக்கொல்லியை ஏக்கருக்கு 200 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும். களைக்கொல்லி உபயோகப்படுத்த வில்லையெனில் விதைத்த 15 மற்றும் 30ம் நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும்.
இலை வழி ஊட்டம்
மேலும் கூடுதல் மகசூலுக்கு பயிரின் 50 சதம் பூக்கும் பருவம் (அதாவது 25 வது நாளில்) மற்றும் காய் பிடிக்கும் பருவம் (அதாவது 45 வது நாளில்) 2 சதம் டி.ஏ.பி கரைசலை இலை வழி உரமாக மாலை வேளையில் செடிகளின் மீது படுமாறு தெளிக்க வேண்டும். தெளித்தவுடன் உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும். இதனால் காய் பிடிக்கும் திறன் அதிகரிக்கும். இந்த 2 சதம் டி.ஏ.பி கரைசல் தயாரிப்பதற்கு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி தேவை. இதனை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊற வைத்து, மறு நாள் காலையில் தெளிந்த கரைசலை சேகரித்து தெளிக்க வேண்டும். அல்லது ஒரு ஏக்கருக்கு 2 கிலோ பயறு ஒண்டர் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டது) மருந்தை ஒட்டும் திரவத்துடன் 200 லிட்டர் நீரில் கலந்து பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். இதன் மூலம் செடிகள் வறட்சியைத் தாங்கி அதிக அளவில் காய்த்து 20-25 சதவிகிதம் வரையில் கூடுதல் விளைச்சலைக்
கொடுக்கும்.
இலைவழி
ஊட்டத்தின்
பயன்கள்
பயறு வகைகளில் புரதம் அதிகமாக இருப்பதால், இந்தப் புரத மாற்றத்துக்கு மணிச்சத்து மிகவும் அவசியம். இது நிலத்திலிருந்து கிடைப்பதை விட இலை மூலம் எளிதில் கிடைக்கிறது. மேலும், பயிர்கள் பூத்த பிறகு வேர்களில் சத்துகளை எடுக்கும் தன்மையும், நிலத்திலிருந்து சத்துகள் கிடைப்பதும் குறைந்து விடும். எனவே, இலை மூலம் கொடுக்கப்படும் தழைச்சத்து, மணிச்சத்துள்ள டிஏபி கரைசல் நல்ல பயனை அளிக்கிறது.பூத்த பிறகு இலைகளில் உற்பத்தியாகும் மாவுச்சத்தே விதைகளில் சேமிக்கப்படுகிறது. எனவே, டிஏபி மூலம் கிடைக்கும் தழைச்சத்து, இலைகளைப் பச்சையாக வைத்திருந்து அதிக மாவுச்சத்து உற்பத்திக்கு உதவுகிறது. பயிரில் பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மணியின் எடையைக் கூட்ட பொட்டாஷ் உதவுகிறது. பிளானோபிக்ஸ், பூ, பிஞ்சுகள் உதிர்வதைத் தடுத்து அதிகக் காய்கள் பிடிக்க உதவுகிறது.
பயிர் பாதுகாப்பு
காய்த்துளைப்பானின் சேதம் அதிகமிருப்பின் 5 சத வேப்பங்கொட்டைச் சாறு (அல்லது) இன்டக்ஸாகார்ப் எக்டருக்கு 333 மிலி தெளித்து கட்டுப்படுத்தலாம். வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் 1 கிராம் கார்பன்டசிம் என்ற விகிதத்தில் கரைத்து செடியின் வேர்ப்பாகம் நனையுமாறு ஊற்ற வேண்டும். மஞ்சள் தேமல் மற்றும் இலைச்சுருள் நோய்களைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும். மேலும், இதனைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த டைமெத்தாயேட் 30 ஈ.சி. 200 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
வம்பன் 11 ரகம் ஒருமித்த முதிர்ச்சியுறும் தன்மை உடையதால் ஒரே சமயத்தில் அறுவடை செய்ய ஏதுவானது. காய்கள் 80 சதம் முதிர்ச்சி அடைந்தவுடன் செடிகளை அறுவடை செய்து வெயிலில் காயவைத்து மணிகள் பிரித்தெடுக்க வேண்டும். ஒரு செடியில் 60-80 காய்களும், ஒரு காயில் சராசரியாக 6-8 விதைகளும் கிடைக்கும். எக்டருக்கு 1230 கிலோ என்ற அளவில் மகசூல் கிடைக்கும். அறுவடை செய்த விதைகளை 10 சதவீத ஈரப்பதத்திற்கு வரும் வரை காய வைக்க வேண்டும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால் முளைப்புத் திறனை விதைகள் விரைவில் இழந்து விடும். சேமிப்பின்போது வண்டுகள் தாக்காமல் இருக்க 100 கிலா விதையுடன் 1 கிலோ வேப்ப எண்ணெய் (அல்லது) ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணுடன் கலந்து சேமித்து வைக்கலாம்.