பாமகவினர் கடும் அதிருப்தி
பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று ஓட்டு கேட்பு கூட்டணி கட்சியினரை மதிக்காத மத்திய சென்னை பாஜ வேட்பாளர்: பாமகவினர் கடும் அதிருப்தி
தமிழகத்தில் சில ஜாதி கட்சிகளுடன் பாஜ கூட்டணி அமைத்துள்ளது. இதில், பாஜ உடன் கூட்டணி அமைத்ததை பாமக கட்சியில் உள்ள தொண்டர்கள் விரும்பவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகியவர்கள் மாற்றுக் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜவினர் கூட்டணி கட்சியினரை சரியாக மதிப்பதில்லை என பல்வேறு இடங்களில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மேலும் பாஜவை சேர்ந்த சிலர் பாமக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமாரை எதிர்த்து பாஜவின் மூத்த நிர்வாகி ஒருவர் வேட்புமனு செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிலைமை இப்படி இருக்க மத்திய சென்னையில் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் கூட்டணி கட்சியினரை மதிக்கவில்லை எனவும், பிரசாரத்திற்கு யாரையும் முறையாக அழைப்பதில்லை எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.
நேற்று எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், கே.பி.பார்க், மோதிலால் நேரு தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மத்திய சென்னை பாஜ வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். ஏற்கனவே பாஜவைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் பெண்களுக்கு பணம் கொடுத்து பிரசாரத்திற்கு அழைத்து வரவேண்டும் என்றும், காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரை இருக்க வேண்டும் என்றும் பேசி வைத்திருந்தனர்.