மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக சுதா அறிவிப்பு
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக சுதா அறிவிப்பு; 3 பேர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் சீட் கிடைத்தது எப்படி? .. பரபரப்பு தகவல்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம்தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை டெல்லி மேலிடம் அறிவித்தது. இதில் திருநெல்வேலி, மயிலாடுதுறை தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், திருநெல்வேலி தொகுதிக்கு நேற்று முன்தினம் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்காததால் திமுக தலைமை அதிருப்தி அடைந்தது. இந்த தகவல் காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரியப்படுத்திய நிலையில், உடனடியாக ராகுல்காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார்.
ஆனால், மயிலாடுதுறை தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடித்ததால் தமிழக காங்கிரசார் மத்தியில் அதிருப்தி நிலவியது. மேலும் மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்புக்கான தாமதம் என்னவென்றால், அதிகமானவர்கள் அந்த தொகுதியை கேட்டது தான். அதாவது சீட் கிடைக்காத சிட்டிங் எம்பிக்கள் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர அய்யர், பிரவீன் சக்கரவர்த்தி, மூத்த தலைவர் தங்கபாலு, நாசே ராமச்சந்திரன், ராமசுகந்தன் போன்றவர்கள் இந்த தொகுதிக்காக டெல்லி மேலிடத்திடம் லாபி செய்தனர். இதனால் யாருக்கு சீட் வழங்குவது என்பது பெரிய பிரச்சனை ஏற்பட்டது.