அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை
கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் அவரை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.அவரை சாகுபடி செய்ய ஆடி, ஆவணி மாதங்கள் ஏற்ற பருவமாகும். மேலும் மலை பகுதியில் அவரை சாகுபடி செய்வதற்கு சித்திரை மாதம் சிறந்ததாகும். அதேநேரம் செடி அவரையை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
அவரை பட்டை அவரை, கோழி அவரை, பட்டை சிகப்பு, நெட்டு சிகப்பு, குட்டை அவரை என பல ரகங்கள் உள்ளது. இதில் பந்தல் முறையில் அவரை சாகுபடி செய்தால் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதையும், செடி அவரை சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதையும் தேவைப்படும். விதைகளை நடுவதற்கு முன்பு ரைசோபியம் 200 கிராம், பாஸ்போபாக்டீரியா 200 கிராம், டிரைக்கோடெர்மா விரிடி 100 கிராம், சூடோமோனஸ் புளுரசன்ஸ் 100 கிராம் போன்றவற்றை ஆறிய அரிசி வடி கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்னர் 24 மணி நேரத்திற்குள் நடவு செய்ய வேண்டும்.