தமிழச்சி தங்கபாண்டியன் – தமிழிசை சவுந்தராஜன்
அரசியலில் எதிரி.. நேரில் தோழிகள்.. தமிழச்சி தங்கபாண்டியன் – தமிழிசை சவுந்தராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து
தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பாக தமிழிசை சௌந்தராஜன், திமுக சார்பாக தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தன்னுடைய வேட்புமனுவை சென்னை அடையாரில் இருக்கக்கூடிய தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதன் பிறகு இருவரும் சந்தித்து கொண்டனர்.
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ள தமிழிசை சௌந்தராஜன் இன்று வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் அமித்திடம் தாக்கல் செய்தார். முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு தமிழிசை சௌந்தராஜன் வருகை தந்தபோது, தமிழச்சி தங்கப்பாண்டியன் தனது வேட்புமனுவது தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார். அப்போது தமிழச்சி தங்கப்பாண்டியனும் – தமிழிசை சௌந்தராஜனும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து கொண்டனர்.
அப்போது இருவரும் கட்டி அணைத்து மாறி மாறி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். அவர்களுக்குள் இருக்கும் நட்பு நீண்டகாலமானது. இருவரின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள். அரசியல் ரீதியாக இருவருக்கும் இடையே போட்டிகள் இருந்தாலும், அதற்கு அப்பாற்பட்டு இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உள்ளது. தற்போது தேர்தல் களத்தில் ஒருவருக்கு ஒருவர் எதிராக போட்டியிடும் நிலையிலும் இருவரும் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டது குறிப்பிடத்தக்கது.