அப்பள கார குழம்பு செய்முறை
தேவையான பொருட்கள் அப்பளம் – 10 சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 2 பூண்டு – ஒரு கைப்பிடி அளவு புளி – எலுமிச்சை பழ அளவு மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன் வரமிளகாய் – 5 சாம்பார் பொடி – 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 1/2 ஸ்பூன் கருவேப்பிலை – 2 கொத்து மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் பெருங்காயம் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு வெல்லம் – ஒரு சிறிய துண்டு .
செய்முறை
முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அப்பளத்தை பொறித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம், வரமிளகாய் இவற்றை சேர்க்க வேண்டும். வெந்தயம் சிவந்து கடுகு வெடித்ததும் அதில் ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்த்து உரித்து வைத்திருக்கும் பூண்டையும் சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு வதங்கிய பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பூண்டும் வெங்காயமும் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து தக்காளி மசியும் வரை அதை வதக்க வேண்டும். தக்காளி நன்றாக மசிந்த பிறகு இதில் மிளகாய் தூள், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
மிளகாய் தூளின் வாடை நன்றாக நீங்கிய பிறகு அதில் கரைத்து வைத்திருக்கும் புளியை ஊற்ற வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பை சேர்த்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு வெல்லத்தையும் சேர்த்து புளியின் பச்சை வாடை போகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். குறைந்தது பத்து நிமிடம் ஆவது கொதித்த பிறகு நாம் பொரித்து வைத்திருக்கும் அப்பளத்தை இரண்டு மூன்று ஆக உடைத்து குழம்பில் சேர்த்து லேசாக ஒரு கிண்டி கிண்டி குறைந்த தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். இப்பொழுது தனியாக ஒரு சிறிய கடாயை வைத்து அதில் பொன்னிறமாகும் வரை வெந்தயத்தை வறுத்து அதை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். வெந்தயப் பொடியில் இருந்து அரை ஸ்பூன் மட்டும் எடுத்து, மீதம் இருக்கும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையையும் அதில் ஊற்றி ஒரு கொத்து கருவேப்பிலையும் தூவி விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். மிகவும் சுவையான பாரம்பரியமிக்க அப்பள கார குழம்பு தயாராகிவிட்டது. இந்த குழம்பை உடனே சாப்பிடுவதை விட ஐந்து மணி நேரம் கழித்து சாப்பிடுவது மிகவும் சுவையாக இருக்கும். மேலும் அப்பளத்தில் அதிக அளவு உப்பு சேர்ந்திருந்தால் குழம்பில் சேர்க்கக்கூடிய உப்பை சிறிது குறைத்துக் கொள்வது நல்லது.