கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முபின் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததும், கோவையில் நாசவேலையை அரங்கேற்றும் நோக்கத்தில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையிலேயே முகாமிட்டு, கார் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது முகமது உசேன், ஜமேசா மரி உள்ளிட்ட 3 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு மூவரையும் அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. விசாரணை நடத்துகின்றனர்.