ஜூனியர் மாணவருடன் ஓடிய சீனியர் மாணவி

சேலத்தில் சட்டக்கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் ஜூனியர் மாணவருடன் மூன்றாமாண்டு படிக்கும் சீனியர் மாணவி ஓட்டம் பிடித்தார். இருவரது பெற்றோரும் புகார் கொடுத்த நிலையில் இருவரையும் போலீசார் மீட்டனர். ஈரோட்டை சேர்ந்த 21 வயது மாணவி, சேலம் தனியார் சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவர் சேலம் கன்னங்குறிச்சியில் தோழிகளுடன் தங்கியிருந்தார். கடந்த 11ம் தேதி அந்த மாணவியின் தந்தை மகளை செல்போனில் அழைத்தார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த போனை எடுத்துள்ளார்.

அவர், தனது பெயரை சொல்லி, உங்கள் மகளை நான் காதலிக்கிறேன் என்று கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை கல்லூரிக்கு 17ம் தேதி வந்து விசாரித்தார்.அப்போது, 11ம் தேதி கல்லூரியில் இருந்து அவரது மகள் டிசியை வாங்கிச் சென்று விட்டதாக நிர்வாகம் தெரிவித்தது. மேலும் அந்த வாலிபர் யார் என விசாரித்தபோது, அவர், தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் நயினார்புரத்தை சேர்ந்த 20 வயது மாணவர் என்பதும், அதே கல்லூரியில் 2ம் ஆண்டு படிப்பதும், அவரும் அதே நாளில் டிசி வாங்கிச் சென்றதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை இதுபற்றி கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடினர்.

இதனிடையே மாணவனின் தந்தை சாரதியும் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் கல்லூரி சென்ற தனது மகனை காணவில்லை என புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மாயமான இருவரும் ஏற்காட்டில் இருப்பது தெரிய வந்தது. அவர்களை அழைத்து வந்து விசாரித்தனர். அதில் இருவரும் தங்கள் பெற்றோருடன் செல்வதாக கூறினர். நீதிமன்ற அறிவுரையின் பேரில் இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வேறு கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பை முடித்துக்கொள்வதாகவும், அதன்பிறகு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறினர். இதனை ஏற்றுக்கொண்டு இருவரும் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.