பாரிபா ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இகா-மார்தா மோதல்
அமெரிக்காவில் நடக்கும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் இகா ஸ்வியாடெக் – மார்தா கோஸ்டியுக் மோதுகின்றனர். காலிறுதியில் டென்மார்க்கின் காரோலின் வோஸ்னியாக்கியுடன் (33வயது, 204வது ரேங்க்) மோதிய போலந்து நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் (22 வயது, 1வது ரேங்க்) 6-4, 1-0 என முன்னிலை வகித்தபோது, காயம் காரணமாக வோஸ்னியாக்கி வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து, ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி (28 வயது, 9வது ரேங்க்), அமெரிக்காவின் எம்மா நவர்ரோ (22வயது, 23வது ரேங்க்) உடன் மோதினார். அதில் சாக்கரி 5-7, 6-2, 6-4 என்ற செட்களில் போராடி வென்றார். உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்டியுக் (21 வயது, 32வது ரேங்க்) 6-0, 7-5 என நேர் செட்களில் ரஷ்யாவின் அனஸ்டேசியா போடபோவாவை (22 வயது, 33வது ரேங்க்) வீழ்த்தினார். சீனாவின் யுயே யுயான் (25வயது, 49ரேங்க்) உடன் மோதிய அமெரிக்காவின் கோகோ காஃப் (20 வயது, 3வது ரேங்க்) 6-4, 6-3 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.