சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை குடியரசுத் தலைவர் மூலம் நிறுத்தி வைக்க பாஜக அரசு முயல்வது வெட்கக்கேடானது! – சீமான் கண்டனம்

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை, குடியரசுத் தலைவர் மூலம் நிறுத்தி வைக்க, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவேன் என்று கூறி ஆட்சி அதிகாரத்தை அடைந்த பிரதமர் மோடி, சொந்த நாட்டின் அரசு வங்கியில் முறைகேடாகச் செலுத்தப்பட்டுள்ள பல்லாயிரம் கோடிகள் குறித்த தகவல்களை வழங்க மறுப்பதென்பது வெட்கக்கேடானது.

அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதை முறைப்படுத்துவதற்கான திட்டம் என்று கூறி, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 01.02.2017 அன்று அறிவித்தது. மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாதபோதும் ‘நிதி சட்டவரைவு’ என்ற பெயரில் நிதிநிலை அறிக்கையுடன் இணைத்து, குறுக்குவழியில் அத்திட்டத்ததை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றியது பாஜக அரசு.

ஆனால், தேர்தல் பத்திரங்கள் திட்டம் தொடங்கப்பட்டவுடனேயே, அது கருப்புப் பணப்புழக்கத்தை அதிகரிக்கவே பயன்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்தது. அதுமட்டுமின்றி, 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், ‘தேர்தல் பத்திரங்கள்’ அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைகளின் வெளிப்படைத்தன்மையை முடிவுக்குக்கொண்டுவரும் என்று கூறியதுடன், இனி இந்திய அரசியலை வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள் தீர்மானிக்க இத்திட்டம் வழிவகுக்கும் என்ற அச்சத்தையும் தெரிவித்திருந்தது.

மேலும், இந்தியாவில் துணை நிறுவனங்களைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க அனுமதிக்கும் வகையில் FCRA சட்டம் பாஜக அரசால் திருத்தப்பட்ட பிறகு, நன்கொடை அளிப்பதற்காகவே புதிய போலி நிறுவனங்களைத் தொடங்கும் அளவிற்குத் தேர்தல் பத்திர முறைகேடுகள் உச்சத்தை அடைந்தது.

ஆனால், அவற்றையெல்லாம் குறித்துச் சிறிதும் கவலைப்படாமல் மோடி அரசு நடைமுறைப்படுத்திய தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் 16,500 கோடி ரூபாய் அளவிற்கு ரகசிய நன்கொடைகளைப் பெற்றுள்ளது. ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மூலம் 50 விழுக்காட்டுக்கும் மேல் (ஏறத்தாழ 7000 கோடிக்கும் மேல்) பாஜக மட்டுமே நிதியாகப் பெற்றுள்ளது. 1100 கோடிக்கும் மேல் நிதியைப்பெற்று காங்கிரசு கட்சி இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டை ஆளும் திமுக 600 கோடிக்கும் மேல் மறைமுகமாக நிதியைப்பெற்றுள்ளது.

இம்மாபெரும் ஊழல் குறித்து ADR (Association for Democratic Reforms) உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் சட்ட விரோதமானவை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பினை கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வழங்கியதுடன், 2019 ஆம் ஆண்டு முதல் எஸ்.பி.ஐ., வங்கி பெற்ற தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை, 2024 மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டுமென்றும், அந்தத் தகவல்களை மார்ச் 13ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தன் இணையதளத்தில் வெளியிட வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டால் பாஜகவின் இமாலய ஊழல் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் 4 மாதங்கள் அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியைக் கண்டித்த உச்சநீதிமன்றம், ‘சிறிதளவாவது நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்’ என்றும் எச்சரித்தது. மேலும், தேர்தல் இணை ஆணையர் அருண்கோயல் தனது பதவியைத் துறந்ததும், அவசர அவசரமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதும் தேர்தல் பத்திர முறைகேடுகளை மக்களிடமிருந்து மூடி மறைக்கும் பாஜக அரசின் முயற்சிதானோ என்ற ஐயத்தை எழுப்புகிறது.

தற்போது மேலும் ஒரு படியாகத் தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆதீஷ் அகர்வால் மூலம் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதவும் வைத்துள்ளது பாஜக அரசு. தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டால் பன்னாட்டு நிறுவனங்களின் சுதந்திரம் பாதிக்கப்படும், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவது தடைபடும் என்றெல்லாம் காரணம் கூறுவது, பாஜக அரசு சொந்த நாட்டு மக்களுக்கானதா? அல்லது வெளிநாட்டு பெரு முதலாளிக்கானதா? என்ற கேள்வியும் எழுகிறது. நாட்டில் வாழும் பாமர மக்களின் நல்வாழ்வினை விடவும், நன்கொடை தந்து, நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்க வரும் பன்னாட்டு நிறுவனங்களின் நலனைப் பாதுகாப்பதுதான் பாஜக அரசிற்கு முக்கியமானது என்பதும் தெளிவாகிறது.

ஊழலுக்கு அப்பாற்பட்ட புனிதக் கட்சி தாங்கள் என்று மார்தட்டிக்கொள்ளும் பாஜக, எவ்வித ஊழல் முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றால், தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களைப் பொதுவில் வைப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? தேர்தலுக்கு முன்பாக அவை வெளிவந்துவிடக் கூடாது என்று பாஜக அரசு ஏன் தடுக்கிறது? தேசபக்தி, சுதேசி என்றெல்லாம் பாடமெடுக்கும் பாஜக பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து முறைகேடாக நிதியைப் பெறுவதற்கு வெட்கமாக இல்லையா? அந்நிய நாட்டு முதலாளிகள் இந்திய அரசியலுக்குள் ஆதிக்கம் செலுத்துவதை ஆதரிப்பதுதான் பாஜகவின் தேசபக்தியா?

தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற பல கோடி கணக்கான வாக்குகளைச் சில மணி நேரங்களில் எண்ணி முடித்து, தேர்தல் முடிவை அறிவிக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்நாட்டில், அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நன்கொடைகளைக் கணக்கிட பல மாதங்கள் ஆகும் என்பது நகைப்பிற்குரியது. பொதுத்தேர்தலில் குறைந்தபட்சம் 8 விழுக்காடு வாக்குகள் பெற்றால்தான் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகி நிரந்தரச் சின்னத்தைப் பெறமுடியும் என்ற நிலையில், ஒரு விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தாலே தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்லாயிரம் கோடிகளை நன்கொடையாகப் பெற முடியும் என்பது அயோக்கியத்தனம் இல்லையா?

தேர்தல் பத்திரங்கள் நாட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டால் அரசியல் கட்சிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்களை நிதியாக அளித்த பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் எவை? எவை? ஆளும் கட்சிக்கு நிதி அளித்ததன் கைமாறாக அரசுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் பெற்ற நிறுவனங்கள் எவை? வரிச்சலுகைகள் பெற்ற நிறுவனங்கள் எவை? பல்லாயிரம் கோடிகள் கடன் தள்ளுபடி பெற்ற நிறுவனங்கள் எவை? நன்கொடை வழங்கிய பிறகு வழக்கிலிருந்து விடுபட்ட நிறுவனங்கள் எவை? கடனைச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்ற முதலாளிகள் யார்? ஊழல் விசாரணைகளிலிருந்து தப்பியவர்கள் யார்? யார்? என்பது உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் வெளிவரும், அதன்மூலம் தான் செய்துள்ள இமாலய ஊழல் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சம் காரணமாகவே அதனை வெளியிடாமல் தடுக்கப் பார்க்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.

ஆகவே, தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் மறைமுக நன்கொடை என்ற பெயரில் பன்னாட்டுப் பெருநிறுவனங்களிடமிருந்து பல்லாயிரம் கோடிகள் முறைகேடாகப் பெற்றுள்ள மிகப்பெரிய ஊழலை வெளிக்கொண்டுவருவதில் நாட்டு மக்களின் இறுதி நம்பிக்கையாக உள்ள உச்சநீதிமன்றம் தமது உறுதியான நடவடிக்கைகளைத் தொடர வேண்டுமென்றும், அதனைத் தடுத்து நிறுத்த, குடியரசுத் தலைவரின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயலும் நடவடிக்கைகளை பாஜக அரசு கைவிட வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

-சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.