60 லட்சம் மண்டை ஓடு
பழங்கால நினைவுச்சின்னங்கள் மீது சுற்றுலாப் பயணிகளுக்கு இருக்கும் நீண்டகால ஈர்ப்பை பல இன்ஸ்டாகிராம் ரீல்கள் எடுத்துக்காட்டுகிறது. ஆனால் பல நூற்றாண்டுகள் பழமையான அருங்காட்சியகங்கள் மனித எச்சங்களைக் காட்சிப்படுத்துவது மிகவும் சிக்கலானது என்று பலர் வாதிடுகின்றனர்.
பாரிஸ் நகரில் எடுக்கப்பட்ட ஒரு சமீபத்திய டிக்டாக் காணொளி பார்ப்பவர்களுக்கு ஒரு அமானுஷ்ய உணர்வை அளித்தது. வைரல் வீடியோக்களில் இருந்த சில சாகசப் பிரியர்கள் பாரிஸ் நகரத்தின் அடியில் உள்ள இடைக்காலத்தைச் சேர்ந்த பாதளக் கல்லறைகளில் நுழைவதைக் காண முடிந்தது.
இருள் நிறைந்த அந்த சுரங்கங்களில் தரையிலிருந்து கூரை வரை ஆறு மில்லியன் மக்களின் மண்டை ஓடுகளால் நிரம்பியுள்ளது என்பது அந்த அமானுஷ்ய உணர்வுக்கு காரணம்.
இந்த ரீல்ஸ் மோகத்தில் சிலர் சட்டவிரோதமாக இந்த இடங்களில் நுழைந்து, மனித எலும்புகளால் அடுக்கப்பட்ட அறைகளின் வழியே நடந்து செல்கிறார்கள், சில நேரங்களில் ஊர்ந்து செல்கிறார்கள். இருளில் சிறு விளக்குகளுடன் நகரின் சுமார் 300 கிமீ சுரங்கப் பாதைகளை ஆராய்கின்றனர், எப்போதாவது தொலைந்தும் போகிறார்கள்.
பாரிஸில் உள்ள சில விமர்சகர்கள் இதிலுள்ள அபாயங்கள் மற்றும் சாத்தியமான ஆபத்துகள் பற்றி எச்சரித்தாலும், இறந்தவர்களின் எலும்புகளோடு தங்கள் தோள்களைத் தேய்க்க ஆர்வம் காட்டும் பயணிகள் அதை கண்டுக்கொள்வதில்லை.