சீமான் வேண்டுகோள்

சங்கரன்கோவில் முருகனின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்! – சீமான் வேண்டுகோள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள வடக்கு புதூரைச் சேர்ந்த வாகன ஓட்டுநரான அன்புத்தம்பி முருகனை, கடந்த 08.03.2024 வெள்ளிக்கிழமையன்று இரவு காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்ற நிலையில், தம்பி முருகன் காவல் நிலையத்திலேயே உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளில் காவல்துறையே முற்றாகச் சீர்குலைந்து, மக்களுக்கெதிரானதாக மாறி நிற்கிறது என்பதற்கு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காவல்நிலைய மரணங்கள் தக்கச் சான்றுகளாகும்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, மக்களைக் காத்து நிற்க வேண்டிய காவல்துறையினரே, விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படுவோரை அடித்துக் கொலைசெய்வதும், மரணத்திற்குக் காரணமான காவல்துறையினரை எவ்வித சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்தாது தப்பிக்கச்செய்வதுமான செயல்பாடுகள் திமுக அரசின் பொறுப்பற்ற தன்மையையும், மக்கள் விரோதப்போக்கையுமே காட்டுகிறது. முதுகுளத்தூர் மணிகண்டன், சேலம் பிரபாகரன், திருவண்ணாமலை தங்கமணி, பட்டினப்பாக்கம் விக்னேஷ், கொடுங்கையூர் ராஜசேகர், நாகை சிவசுப்பிரமணியன், தற்போது சங்கரன்கோவில் முருகன் என நீண்டுகொண்டே செல்லும் காவல்நிலைய மரணங்கள் திமுக ஆட்சியின் அவலநிலையைப் பறைசாற்றும் கொடுந்துயரங்களாகும்.

காவல்நிலைய மரணத்தைப் பற்றிய ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘தூங்கவில்லையென’ மனமுருகிய மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், அவரது ஆட்சிக்காலத்தில் நடந்தேறி வரும் காவல்நிலைய மரணங்களைக் கண்டும் காணாததுபோலக் கடந்து செல்வதும், கொலையாளிகளைத் தண்டிக்காது காப்பாற்ற துணைபோவதும் முறைதானா? ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கான சமூகநீதி ஆட்சியென வாய்நிறையப் பேசிவிட்டு, அநீதி இழைக்கப்பட்டு இறந்துபோன எளிய மக்களுக்கான குறைந்தபட்ச நீதியைக்கூடப் பெற்றுத்தர மறுப்பது மோசடித்தனமில்லையா? காவல்துறையினர் தங்கள் கையிலுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழை மக்களைக் கடுமையாகத் தாக்கி, கொலைசெய்து மூடி மறைப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமத்துவமா? சமூகநீதியா? சனநாயகமா?

ஆகவே, காவல்துறையைத் தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் இனியும் தாமதிக்காமல் அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சங்கரன்கோவில் முருகனின் படுகொலைக்குக் காரணமான காவலர்கள் மீது உடனடியாகக் கொலை வழக்கினைப் பதிந்து கைது செய்வதுடன், விரைவான, நியாயமான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

மேலும், தம்பி முருகனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புத்தம்பி முருகனின் குடும்பத்தினருக்கு என் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

  • சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.