காத்திருப்பு போராட்டம் துவக்கம்

துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காத்திருப்பு போராட்டம் துவக்கம் பேராசிரியர்கள் தொழிலாளர்கள் பங்கேற்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி, பேராசிரியர்கள், தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் அடுத்த கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தின் பணி நியமனம், கொள்முதலில் பல்வேறு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின்படி, கூடுதல் செயலாளர் பழனிசாமி, இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இதில், கணினி அறிவியல் துறைத்தலைவரும் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளருமான தங்கவேல் மீது தெரிவிக்கப்பட்ட 8 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய, துணைவேந்தர் ஜெகநாதனுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்தி உத்தரவிட்டார். ஆனால், துணைவேந்தர் ஜெகநாதன் அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை கேட்டு, உயர்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பினார். ஆதாரங்களை அனுப்பிய பின்னரும் பதிவாளர் தங்கவேல் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் ஓய்வுபெற்றார். துணைவேந்தர் ஜெகநாதனின் அரசு உத்தரவை கண்டுகொள்ளாத போக்கை கண்டித்து, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.