பேரூர் நச்சுப் பொய்கையும் ரசவாத தீர்த்தமும்
சிவபெருமான் எங்கும் பரந்து விரிந்திருக்கின்ற நிலையை விரிவாகக் கூறித் துதிக்கும் பாசுரம் திருநாவுக்கரசரின் ‘‘நின்ற திருத்தாண்டகம்’’ ஆகும். இதில் பெருமான், கங்கையிலும் புனிதமான காவிரியாய் இருப்பது போலவே, அதிலிருந்து கால்பிரிந்து ஓடும் வாய்க்காலாகவும், ஒன்றுக்கும் உதவாத கழியுமாகவும் இருக்கின்றான் என்று குறிக்கின்றார். ‘கழி’ என்பது கடல்நீர் நிலப்பகுதிக்குள் தேங்கிநிற்கும் நீர்நிலை.
கோயம்புத்தூரின் ஒரு பகுதியாக திகழ்வது பேரூர். இது கொங்குநாட்டுச் சிதம்பரம், அரசம்பலம், பட்டீச்சரம் எனப் பலவாறு அழைக்கப்படுகிறது. இங்கு முப்பத்திரெண்டுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. இவற்றில் ஒன்று, நச்சுப் பொய்கைத் தீர்த்தமாகும். இதன் தண்ணீரை அருந்தினால் மரணம் உண்டாகும். அதனால் அதனை மூடி அதன்மீது பட்டி விநாயகர் சந்நதியை அமைத்துள்ளனர்.